‘ஜெய் பீம்’. திரைப்படம் ; நடிகர் சூர்யா மீது வழக்கு

சூர்யா தயாரித்து, நடித்த படம் ‘ஜெய் பீம்’. த.செ.ஞானவேல் இயக்கிய இந்தப் படம் இருளர்களின் வாழ்க்கையைப் பற்றி பேசியது.

காவல்துறை விசாரணையில் இறந்த இருளர் சமூக இளைஞனின் மனைவிக்கு நீதி பெற்றுத் தந்த ஒரு வழக்கறிஞரின் கதையாக இது அமைந்தது.

இந்தப் படம் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியானது.

இந்தத் திரைப்படத்தில் குறவர் சமூகத்தினரை இழிவுபடுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன என்றும், ஜெய்பீம் திரைப்படத்தை தயாரித்து, நடித்த சூர்யா, இயக்குநர் ஞானவேல் ஆகியோர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறவர் நல்வாழ்வுச் சங்கத்தின் சார்பில் சென்னை மத்திய குற்றப்பிரிவுக் காவல்துறையில் புகார் செய்யப்பட்டது.

ஆனால், புகாரில் முகாந்திரம் இல்லை எனக் கூறி, காவல்துறை நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டது.

இதனையடுத்து, தங்கள் புகார்மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் குறவர் நல்வாழ்வுச் சங்க நிர்வாகிகள் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதனை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிர்வாகிகள் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

நிர்வாகிகளின் மனுவுக்குச் சென்னை காவல்துறை ஆணையர், நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் ஆகியோர் பதிலளிக்கும்படி கடிதம் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு அது தள்ளிவைத்தது.

‘ஓடிடி’ தளத்தில் வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படம் பல்வேறு தரப்பிலும் பாராட்டுகளை அள்ளியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here