“நிலவில் ஒரு இரவு தாக்குப் பிடிக்காது”.. இந்தியாவின் சந்திரயான்-3 திட்டத்தை கேலி செய்யும் சீனா

புதுடெல்லி நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கி உள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டரில் இருந்து ரோவர் வெளியேறும் அரிய காட்சிகள் அடங்கிய வீடியோவை இஸ்ரோ நேற்று வெளியிட்டது.

உலகின் எந்த நாடுமே நுழைந்திடாத நிலவின் தென்துருவத்தில் இந்தியா தடம் பதித்து உள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த 23-ந் தேதி நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது.

அதைத்தொடர்ந்து சில மணி நேரத்தில் லேண்டரில் இருந்த 26 கிலோ பிரக்யான் ரோவர் வெளியேறி நிலவின் தரைப்பகுதியில் தடம் பதித்து உள்ளது. இதன் மூலம் நிலவு ஆராய்ச்சியில் இந்தியா சரித்திர சாதனை படைத்து உள்ளது. இதனை உலகம் முழுவதும் உள்ள செய்தித்தாள்கள் மிகவும் பாராட்டி செய்திகளை வெளியிட்டன.

நிலவில் தரையிறங்கியதும், லேண்டரும், ரோவரும் தங்கள் பணிகளை திட்டமிட்டபடி மேற்கொள்ள தொடங்கிவிட்டன. நிலவின் தரைப்பகுதியில் பல்வேறு விதமான ஆய்வுகளை இந்த கருவிகள் கச்சிதமாக மேற்கொண்டு வருகின்றன.

அத்துடன் நிலவின் மேற்பகுதியில் இருந்து பல்வேறு புகைப்படங்களையும், வீடியோக்களையும் எடுத்து பெங்களூருவில் உள்ள தரைக்கட்டுப்பாட்டு தளத்துக்கு அனுப்பி வருகின்றன. அந்தவகையில் லேண்டரில் இருந்து ரோவர் வெளியேறும் காட்சிகள் வீடியோவாக எடுக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது.

லேண்டரில் உள்ள நவீன கேமரா மூலம் இது எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த வீடியோவை இஸ்ரோ நேற்று தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டது. அதில், ‘சந்திரயான்-3 ரோவர், லேண்டரில் இருந்து நிலவின் மேற்பரப்புக்கு எப்படி சென்றது குறித்து இங்கே…’ என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்திய விஞ்ஞானிகளின் படைப்புகள் மற்றொரு கிரகத்தில் மிகவும் சிறப்பாக செயல்படும் இந்த அரிய காட்சிகள் காண்போரின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன. இதற்கிடையே நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய விக்ரம் லேண்டர், கடந்த 2019-ம் ஆண்டு அனுப்பப்பட்டு இன்றும் நிலவை சுற்றி வரும் சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் புகைப்படம் எடுத்து உள்ளது.

சந்திரயான்-2 ஆர்பிட்டரில் உள்ள நவீன கேமரா எடுத்து அனுப்பிய இந்த புகைப்படத்தையும் இஸ்ரோ வெளியிட்டு இருந்தது. இதுவும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது. நிலவின் மேற்பரப்பில் ரோவரின் இயக்கத்தை தொடர்ந்து கண்காணித்து வரும் இஸ்ரோ விஞ்ஞானிகள், அது 8 மீட்டர் அளவுக்கு நகர்ந்திருப்பததாக கூறியுள்ளனர்.

மிகக்குறைந்த செலவில் செயல்படுத்தப்பட்ட இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம் பல நாடுகளால் பாராட்டப்பட்டது. இது குறித்து பலவேறு நாட்டின் ஊடகங்கள் பாராட்டி செய்திகள் வெளியிட்டன.

ஆனால் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊதுகுழலாக கருதப்படும் குளோபல் டைம்ஸ், இந்தியாவின் விண்வெளி திட்டத்தை சீனாவுடன் ஒப்பிட்டு சந்திரயான் திட்டத்தை கேலி செய்து உள்ளது. குளோபல் டைம்ஸ் வெளியிட்டு உள்ள செய்தியில் பல்வேறு துறைகளில் இந்தியாவை விட சீனா முன்னணியில் உள்ளது. 2010 இல் சாங்இ-2 ஏவப்பட்டதில் இருந்து, சீனா ஒரு ஆர்பிட்டர் மற்றும் லேண்டரை நேரடியாக பூமி-நிலவின் சுற்றுப்பாதைக்கு அனுப்பி உள்ளது. ஏவுகணை வாகனங்களின் குறைந்த திறன் காரணமாக இந்தியாவில் இந்த தொழில்நுட்பம் இல்லை.

சீனாவின் மேம்பட்ட தொழில்நுட்பம் நேரத்தையும் எரிபொருளையும் மிச்சப்படுத்துகிறது. சீனா பயன்படுத்தும் எரிபொருள் மிகவும் மேம்பட்டது. சீனாவின் ரோவர் 140 கிலோ எடை கொண்டது, இந்தியாவின் ரோவர் பிரக்யான் 26 கிலோ எடை மட்டுமே. இந்தியாவின் பிரக்யான் நிலவில் ஒரு நாள் மட்டுமே நீடிக்கும். நிலவு இரவை தாக்குபிடிக்க முடியாது (ஒரு சந்திர நாள் என்பது 14 பூமி நாட்களுக்கு சமம்.)

இதற்கு மாறாக, சீனாவின் யுடு-2 ரோவர் நிலவின் மேற்பரப்புக்கு அருகில் உள்ளது. நீண்ட காலம் பணிபுரிந்த சாதனையை இது கொண்டுள்ளது. ஏனென்றால், அது அணுசக்தியுடன் கூடியது, அதனால் அது நீண்ட நேரம் செயல்படும். இந்தியாவும் சீனாவும் விண்வெளித் துறையில் இணைந்து செயல்பட வேண்டும் என்று குளோபல் டைம்ஸ் கூறுகிறது. சீனாவின் விண்வெளித் திட்டத்துடன் ஒத்துழைக்க விரும்பும் எந்தவொரு நாட்டிற்கும் சீனா திறந்திருக்கும் என்றும் அந்த குளோபல் டைம்ஸ் கூறுகிறது. இந்தியாவின் இஸ்ரோவுடன் இணைந்து பணியாற்றுவதில் சீனா ஆர்வமாக உள்ளது என்பதை குளோபல் டைம்ஸ் மறைமுகமாக சுட்டி காட்டி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here