கோலாலம்பூர்:
போர்ட் கிள்ளான் பகுதியில் ‘ராக்கி’ (Rocky) என்ற வளர்ப்பு நாய் பிடிபட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அதில் தொடர்புடைய ஒரு ஆணும் ஒரு பெண்ணும் இன்று கிள்ளான் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளனர்.
சம்பந்தப்பட்ட இருவரும் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி முஜிப் சரோஜி முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். தவிர, இதில் தொடர்புடைய பெண் மீது மேஜிஸ்திரேட் ஏ. கார்த்தியாயினி முன்னிலையிலும் கூடுதல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ளன.
குற்றம் சாட்டப்படும் நபர்களில் ஒருவரான முகமட் ஷா இதாம் (வயது 24), கால்நடை பராமரிப்புத் துறையின் (DVS) சம்மனைப் பெற்று இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிறார்.
கிள்ளான் மா நகர மன்றத்தின் (MBDK) அதிகாரப்பூர்வ நடவடிக்கையின் போது ‘Rukun Tetangga’ அமைப்பின் பிரதிநிதியாகவே தான் பங்கேற்றதாகவும், நாயைச் சித்திரவதை செய்யவோ கொல்லவோ இல்லை என்றும் ஷா முன்னதாகக் கூறியிருந்தார். இச்சம்பவம் வைரலானதை அடுத்துத் தனக்கு கொலை மிரட்டல்கள் வந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
கடந்த ஜூலை 29 அன்று தாமான் தெலுக் கெடோங் இண்டா பகுதியில் அமலாக்க நடவடிக்கையின் போது இச்சம்பவம் நிகழ்ந்தது.
ராக்கியின் உரிமையாளர் வீட்டிற்குத் திரும்பிய போது, நாயின் கழுத்தில் கயிறு இறுக்கப்பட்டிருந்ததாகக் கூறினார். நாயை விடுவிக்குமாறு தான் கெஞ்சியும் அமலாக்கத்தில் ஈடுபட்டவர்கள் அதைக் கேட்கவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.
கழுத்தில் கயிறு கட்டப்பட்டு இழுக்கப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 2 அன்று DVS போலிசில் புகார் அளித்ததுடன் நாய் உயிரிழந்தது தொடர்பாக விசாரணையைத் தொடங்கியது.
இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் எந்தவிதப் போராட்டங்களிலோ அல்லது ஆர்ப்பாட்டங்களிலோ ஈடுபட வேண்டாம் எனச் சிலாங்கூர் மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி கஹார் கேட்டுக்கொண்டுள்ளார்.





















