மோசடிகாரர்களிடம் சிக்கி தைப்பிங்கைச் சேர்ந்த பெண்மணி RM382,000 இழந்தார்

ஈப்போ:

தைப்பிங்கைச் சேர்ந்த 57 வயதான திட்ட மேலாளராக பணிபிரியும் பெண்மணி ஒருவர் தொலைபேசி மோசடியில் சிக்கி கிட்டத்தட்ட RM382,000 ஏமாந்துள்ளார்.

அந்தப் பெண் தனது வங்கிக் கணக்கிலிருந்து வேறு 11 கணக்குகளுக்குப் பணம் மாற்றப்பட்டதை உணர்ந்தார் என்று பேராக் காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் டத்தோஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹசன் பஸ்ரி கூறினார்.

“மோசடி செய்பவர்களின் கட்டுப்பாட்டில் அவரது கணக்கு தொடர்பான அனைத்து விவரங்களும் இருந்ததால் அப்பெண்ணுக்குத் தெரியாமல் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டன” என்றார். 

கடந்த ஆகஸ்ட் 18 மற்றும் செப்டம்பர் 6க்கு இடையில் மொத்தம் 18 பரிவர்த்தனைகள் மூலம் RM381,950 பரிமாற்றம் செய்யப்பட்டன” என்று அவர் இன்று திங்கள்கிழமை (செப்டம்பர் 11) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

“மோசடி செய்ததற்காக தண்டனைச் சட்டம் பிரிவு 420 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

பாதிக்கப்பட்டவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 10) போலீசில் புகார் செய்தார்.

முன்னதாக கெடாவின் அலோர் ஸ்டாரில் உள்ள ஒரு கப்பல் நிறுவனத்தில் இருந்து வருவதாகக் கூறி, ஆகஸ்ட் 18 அன்று மதியம் 1.30 மணியளவில், தெரியாத நபரிடமிருந்து அந்தப் பெண்ணுக்கு அழைப்பு வந்ததாக முகமட் யூஸ்ரி கூறினார்.

சரவாக்கின் கூச்சிங்கைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து 100 போலி நோட்டுகள், கிரெடிட் கார்டுகள், மைகேட்ஸ் மற்றும் தானியங்கி பணம் செலுத்தும் இயந்திர அட்டைகள் அடங்கிய பார்சல் தன்னிடம் இருந்ததாக சந்தேக நபர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கூறியதாக அவர் கூறினார்.

“அதன்பின்னர் ‘காவல்துறை அதிகாரிகள் எனக்கூறிக்கொண்டு சிலர் அவரைத் தொடர்பு கொண்டனர், மேலும் ‘டத்தோ’ என்று கூறிக்கொண்ட ஒருவர் உட்பட அவரைத் தொடர்புகொண்டதாக அவர் கூறினார்.

“மேலும் பாதிக்கப்பட்ட பெண் தனது தனிப்பட்ட மற்றும் வங்கி விவரங்கள், கடவுச்சொற்கள் மற்றும் PIN எண்கள் உட்பட அனைத்தையும் அந்த மோசடிக் கும்பலிடம் கொடுத்திருந்தார்.

இவ்வாறு வங்கியின் இரகசிய எண்களை கொடுப்பது தவறு என்றும், அமலாக்க நிறுவனங்களில் இருந்து வந்ததாகக் கூறிக்கொள்ளும் தெரியாத நபர்களிடமிருந்து இதுபோன்ற அழைப்புகள் வரும்போது மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று முகமட் யூஸ்ரி மக்களுக்கு நினைவூட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here