புத்ராஜெயா:
1MDB தணிக்கை கணக்கறிக்கையில் திருத்தம் செய்தது தொடர்பான வழக்கில் இருந்து முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் முன்னாள் 1IMDB தலைமை இயக்குனர் அருள் கந்தா கந்தசாமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகள் டத்தோ ஹதாரியா சையத் இஸ்மாயில், டத்தோ அகமட் ஜைதி இப்ராஹிம் மற்றும் டத்தோ அஸ்மி அரிஃபின் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் குழு, அரசுத் தரப்பு தாக்கல் செய்த இரண்டு மேல்முறையீட்டு மனுக்களை ரத்துச் செய்ததுடன், அரசு தரப்பு தனது மேல்முறையீட்டு மனுவை குறிப்பிட்ட காலத்திற்குள் தாக்கல் செய்யத் தவறியதால், மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க அவர்கள் எந்த விண்ணப்பத்தையும் தாக்கல் செய்யவில்லை என்றும் தெரிவித்தது.
இந்நிலையில் இன்றைய விசாரணையில், அரசுத் தரப்பில் ஆஜரான துணை அரசு வழக்கறிஞர் டத்தோ யுசைனி அமர் அப்துல் கரீம், மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய கால அவகாசம் கோரி மனு தாக்கல் செய்ய அரசுத் தரப்பு உத்தேசித்துள்ளதாகக் நீதிபதிகள் குழுவிடம் தெரிவித்தார்.
ஆனால், அருள் கந்தாவின் வழக்கறிஞர் டத்தோ என். சிவானந்தன் மற்றும் நஜிப்பின் வழக்கறிஞர் டான்ஸ்ரீ முஹமட் ஷஃபீ அப்துல்லா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து,மேல்முறையீட்டு வழக்கை நீதிமன்ற தள்ளுபடி செய்து, நஜிப் மற்றும் அருள் கந்தாவின் முன்னைய தீர்ப்பை (வழக்கிலிருந்து விடுவிப்பு) உறுதிச்செய்தது.





















