ஆஸ்திரேலியாவில் உள்ள வெளிநாட்டவர் நார்வேயில் வேவு பார்க்க மலேசிய மாணவரை நியமித்தார் எனத் தகவல்

பெட்டாலிங் ஜெயா:

நார்வேயில் வேவு பார்த்ததாக நம்பப்படும் மலேசிய மாணவர் ஆஸ்திரேலியாவில் படித்துக்கொண்டிருந்தபோது வெளிநாட்டவர் ஒருவரால் நியமிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் இயங்கிக்கொண்டிருந்த ஒரு வெளிநாட்டு உளவுத்துறை அதிகாரி அந்த மாணவரைத் தொடர்புகொண்டதாக கோலாலம்பூரில் இயங்கும் தூதரகம் சம்பந்தப்பட்ட ஒருவர் கூறினார்.

சந்தேக நபரை, ஆஸ்திரேலியாவில் இயங்கிய வெளிநாட்டவர் நண்பராக்கிக் கொண்டதாக அவர் கூறினார். மேலும் வெளிநாட்டவர், சந்தேக நபருக்கு நிதியுதவி அளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

“அந்த வெளிநாட்டவர் ஆஸ்திரேலிய உளவுத் துறையால் கண்காணிக்கப்பட்டவர். அவரும் சந்தேக நபரான மலேசியரும் ஒன்றாக நார்வேக்குப் பயணம் மேற்கொண்டதாக ஆஸ்திரேலிய உளவுத் துறை, நார்வே உளவுத் துறைக்குத் தெரியப்படுத்தியது,” என்று தகவல் தெரிவித்த தூதரகம் சம்பந்தப்பட்ட நபர் குறிப்பிட்டார்.

கோலாலம்பூரைச் சேர்ந்த 25 வயது சந்தேக நபர், ஒரு குறைந்த வருமானக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று அவர் சொன்னார். சந்தேக நபர், ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள ஒரு கல்லூரியில் வர்த்தகப் பட்டயக் கல்விப் பயின்று வந்ததாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here