தனித்தனியாக அதிகாரம். காலத்தின் கட்டாயம்!

ம்னோ தேசியத் தலைவரும் துணைப்பிரதமருமான டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் ஸாஹிட் ஹமிடி, ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு சட்டத்துறைத் தலைவருக்கும் டிபிபி தரப்புக்கும் இடையிலான அதிகாரத்தைப் பிரிக்க வேண்டும் எனும் கோரிக்கை பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்த இரண்டு தரப்புக்கும் இடையிலான அதிகாரத்தைப் பிரிக்க வேண்டிய கட்டாயம் தற்போது எழுந்துள்ளதாக அரசியல் கட்சிகளும் கூறிவருகின்றன. நம்பிக்கை மோசடி, சட்டவிரோத நாணயப் பரிவர்த்தனை தொடர்பாக 47 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த ஸாஹிட் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார். இது குறித்து எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதிகாரத்தைப் பிரிக்க வேண்டும்

இந்நாட்டின் சட்ட நீதி பரிபாலனத்துறை மீது மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்த வேண்டுமானால் சட்டத்துறைத் தலைவருக்கும் டிபிபி தரப்புக்கும் இடையிலான அதிகாரத்தை மத்திய அரசு விரைந்து பிரிக்க வேண்டும் என்று கெஅடிலான் தகவல் குழுத் துணைத்தலைவர் சுவா வெய் கியாட் வலியுறுத்தி இருக்கின்றார்.

இந்தத் தரப்புகளுக்கு இடையிலான அதிகாரத்தை அவசியம் தனித்தனியாகப் பிரிக்க வேண்டும். ஒரே தன்மையிலான பதவிகளில் இத்தரப்பினர் அமர்ந்துள்ள போதிலும் அவர்கள் ஆற்றும் கடமை வெவ்வேறானது.

ஆகவே இது பல்வேறு தரப்பினரிடையே சந்தேக உணர்வுகளை ஏற்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டி இருப்பதில் நியாயம் இருக்கிறது. யாயாசான் அக்கால்புடி எனப்படும் அறக்கட்டளையின் நிதி தொடர்பான நம்பிக்கை மோசடி, ஊழல், சட்டவிரோத நாணயப் பரிவர்த்தனை தொடர்பில் 47 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த ஸாஹிட் அந்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தால் எப்படி விடுவிக்கப்பட்டார் என்பது சிறந்த உதாரணமாக அமைந்திருக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

ஸாஹிட் இந்த வழக்கில் எதிர்வாதம் புரிந்துகொண்டிருந்த சமயத்தில் டிபிபி தரப்பு செய்துகொண்ட ஒரு மனுவின் அடிப்படையில் ஸாஹிட்டை விடுவிப்பது என்று நீதிமன்றம் முடிவுசெய்திருக்கின்றது.

நீதிமன்றம் ஒரு தீர்ப்பை எடுப்பதற்கு முன்பே டிபிபி தரப்பு வழக்கு விசாரணையை நிறுத்துவதற்குக் குற்றவியல் சட்டம் பிரிவு 254 கீழும் கூட்டரசு அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஷரத்து 145(3)இன் கீழும் சட்டத்துறைத் தலைவருக்கு அதிகாரம் இருக்கிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆகவே சட்டத்துறைத் தலைவரின் கடமையும் டிபிபி தரப்பின் கடமையும் ஒரே தரப்பிடம் இருப்பதற்கு எதிராக உடனடியாகச் சீர்திருத்தங்களைச் ஙெ்ய்து இரு தரப்புக்குமான அதிகாரத்தை தனித்தனியாகப் பிரிக்க வேண்டியது அவசியம் என்றார் அவர்.

மறுஆய்வு

இந்நிலையில் சட்டத்துறைத் தலைவருக்கும் டிபிபி தரப்புக்கும் இடையிலான அதிகாரத்தைத் தனித்தனியாகப் பிரிக்கும் பரிந்துரை குறித்து அரசாங்கம் ஒரு முழுமையான ஆய்வைச் செய்யும் என்று பிரதமர்துறை (சட்டம்- மறு சீரமைப்பு) அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஒஸ்மான் அறிவித்திருக் கின்றார்.

இந்தப் பரிந்துரை குறித்து இறுதி முடிவு எடுப்பதற்கு முன்னதாக ஓராண்டு காலத்தில் இதுபற்றிய முழுமையான ஆய்வைச் செய்ய வேண்டியது அவசியம் என்றார் அவர். இந்தப் பரிந்துரையை நிறைவேற்ற வேண்டுமானால் நடப்பில் இருக்கக்கூடிய ஏறத்தாழ 19 சட்டவிதிகளில் கட்டாயம் திருத்தம் செய்தாக வேண்டும்.

சம்பந்தப்பட்ட அரசியல் அமைப்புச் சட்ட விதியும் இதில் அடங்கும் என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

எதிர்க்கட்சியினர் கேள்வி

ஸாஹிட் எதிர்நோக்கியிருந்த வழக்கில் எடுக்கப்பட்ட டிபிபி தரப்பின் முடிவு குறித்து கோத்தாபாரு பெரிக்காத்தான் நேஷனல் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ தக்கியுடின் ஹசானும் கேள்வி எழுப்பியிருந்தார். ஸாஹிட் வழக்கில் முன்வைக்கப்பட்டிருக்கும் 9 காரணங்களையும் சுட்டிக்காட்டி இருக்கும் அவர் இதற்குப் பிறகு யாராவது இதுபோன்ற குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கிய நிலையில் அவர்கள் விடுவிக்கப்படுவதும் அல்லது விடுதலை செய்யப்படுவதும் ஒரு புதிய நிலைப்பாடாக மாறிவிடுமா என்றும் தக்கியுடின் கேள்வி எழுப்பி இருக்கின்றார்.
இந்த அடிப்படையில்தான் சட்டத்துறைத் தலைவருக்கும் டிபிபி தரப்புக்கும் இடையிலான அதிகாரத்தைத் தனித்தனியாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. நாடாளுமன்றத்திலும் இது தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன.

பிரதமரின் பதில்

இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசியிருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தற்போது இந்தப் பரிந்துரை ஆய்வுக்கட்டத்தில் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆயினும் இதனை அமலாக்கம் செய்வது என்பது மிகவும் சிக்கல் நிறைந்தது. இதற்குக் காலம் பிடிக்கும். ஏனெனில் நிதிச் சிக்கல்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றன என்றும் பிரதமர் விளக்கம் அளித்திருக்கின்றார்.
தற்போதைய நிலையில் சட்டத்துறைத் தலைவருக்கும் டிபிபி தரப்புக்கும் இடையிலான அதிகாரத்தைத் தனித்தனியாகப் பிரிக்க வேண்டும் என்பதற்குப் பலர் ஆதரவு அளித்திருக்கின்றனர். ஆனால் அமலாக்க ரீதியில் இதை மிகக் கவனமாகப் பரிசீலனை செய்ய வேண்டும். ஏனெனில் இதனை அமல்படுத்தும்போது அதனால் ஏற்படக்கூடிய கூடுதல் நிதிச் சிக்கல் அல்லது நிதிச் சுமை கிட்டத்தட்ட 300 மில்லியன் ரிங்காட்டாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

கோரிக்கை வலுக்கிறது

இதற்கிடையே சட்டத்துறைத் தலைவரிடம் இருந்து டிபிபி தரப்பின் அதிகாரத்தைத் தனியாகப் பிரிக்க வேண்டிய அவசியம் குறித்து தொடர்ந்து கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட அரசியல்வாதிகளுக்கு எதிராகத்தான் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்குப் பதிவாகிறது என்ற ஒரு தோற்றத்தைத் தவிர்க்க வேண்டுமானால் இந்தப் பரிந்துரையை அவசியம் நிறைவேற்ற வேண்டும் என்று பக்காத்தான் ஹராப்பான் மிரி நாடாளுமன்ற உறுப்பினர் சியூ சுன் மான் கூறி இருக்கிறார்.

இதனை விரைந்து அமல்படுத்துவது குறித்து அரசாங்கம் அவசியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்தப் பரிந்துரை தொடர்பில் அரசாங்கம் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை அறிந்துகொள்ள பல்வேறு தரப்பினர் காத்திருக்கின்றனர்.
சட்ட நீதி பரிபாலனத்துறை மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வலுவடைய வேண்டுமானால் இதுபோன்ற சீர்திருத்தங்கள் என்பது காலத்தின் கட்டாயமாக அமைந்திருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here