சிரம்பான்:
நெகிரி செம்பிலான் சாலைப் போக்குவரத்துத் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட Operasi Khas Motosikal 2023 என்ற மோட்டார் சைக்கிள்களுக்கு எதிரான நடவடிக்கையில், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி தொடங்கி, மொத்தம் 28,586 வாகனங்களை ஆய்வு செய்து, மொத்தம் 8,123 சம்மன்களை விதித்தது.
அவற்றில் ஓட்டுநர் உரிமம் இல்லாதது, காலாவதியான மோட்டார் வாகன உரிமம் (LKM) மற்றும் 16 வயதுக்கு கீழ் வாகனம் ஓட்டியது உட்பட பல குற்றங்களுக்காக மொத்தம் 827 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் JPJ தெரிவித்துள்ளது.
“16 வயதிற்குட்பட்ட வாகனம் ஓட்டுதல் தொடர்பில் 40 வழக்குகள் பதிவாகின. இந்த தரப்பினர் சாலையில் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதற்கு இன்னும் தகுதி பெறாததால், தமக்கும் பிற பயனாளிகளுக்கும் ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால் பெற்றோர்கள் இவ்விஷயத்தில் மிகுந்த கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், சரியான ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டவர்கள் ஓட்டிச் சென்ற 126 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனவே, பயணத்தைத் தொடங்குவதற்கு முன், வாகனத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்க, ஓட்டுநர் உரிமம் மற்றும் LKM போன்ற முக்கிய ஆவணங்கள் செல்லுபடியாகும் என்பதை உறுதிப்படுத்த பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.



















