குழந்தைப் பருவம் முதல் வாழ்வின் இறுதி காலம் வரையில் நாம் எல்லோருமே தவிர்க்காமல் எடுத்துக் கொள்ளக் கூடிய உணவுப் பொருள்களில் ஒன்றாக பால் உள்ளது. டீ, காஃபி போன்ற வடிவங்களில் பால் அருந்துவது மட்டுமல்லாமல், மோர், தயிர், வெண்ணெய், நெய், பால்கோவா என்று பால் சார்ந்த உற்பத்தி பொருட்களையும் நாம் பயன்படுத்தி வருகிறோம். இப்படி நம் வாழ்வோடு ஒன்றி பிணைந்துள்ள பால் மூலமாகத்தான் நம் எலும்புகளையும், பற்களையும் வலுவாக வைத்திருக்கத் தேவையான கால்சியம் சத்து கிடைக்கும் என்று நம் எல்லோருக்கும் தெரியும். இருப்பினும் நம்மில் சிலருக்கு பால் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது? பால் மூலமாக கிடைக்கின்ற கால்சியம் சத்து பற்றாக்குறையை ஈடுகட்ட என்ன செய்வது?
விதைகள் : விதைகளின் வடிவில் நாம் உட்கொள்ளக் கூடிய பல உணவுப் பொருட்களில் இருந்து கால்சியம் சத்து நமக்கு கிடைக்கும். உதாரணத்திற்கு எள், சியா விதைகள், கசகசா போன்றவற்றில் அபரிமிதமான ஊட்டச்சத்துக்கள் மட்டுமின்றி கால்சியம் சத்து ஏராளம் கிடைக்கிறது. இவற்றை சுழற்சி அடிப்படையில் நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
பாதாம் பருப்பு : நட்ஸ் வகைகளில் பாதாம் பருப்பு நம் உடல் ஆரோக்கியத்திற்கு பல வகைகளில் பலன் தரக் கூடியதாக உள்ளது. சாப்பிடுவதற்கு சுவை மிகுந்த தன்மையில் இருக்கும் பாதாம் பருப்புகளில் பெரும் அளவிலான கால்சியம் சத்து உள்ளது. தினசரி கையளவு பாதாம் பருப்பு சாப்பிட்டு வந்தால் நமக்கான கால்சியம் சத்து தேவை பூர்த்தி அடையும்.
பச்சை நிற கீரைகள் : பாலக்கீரை, தண்டுக்கீரை, அரைக்கீரை போன்ற கீரைகளில் கால்சியம் சத்து மிகுதியாக உள்ளது. குறிப்பாக கேல் எனப்படும் பரட்டை கீரையை சமைத்து சாப்பிட்டால் பாலைக் காட்டிலும் மிகுதியான கால்சியம் சத்து நமக்கு கிடைக்கும். கீரைகளை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் விட்டமின்களும், மினரல்களும் கிடைக்கும்.
சீஸ் : பால் அல்லாத பொருட்களில் இருந்து தயார் செய்யப்படும் வெண்ணெயிலும் கூட கால்சியம் சத்து உள்ளது. உதாரணத்திற்கு பாதாம் பருப்பு சீஸ், கடலைப் பருப்பு சீஸ், சோயா சீஸ் போன்ற பல உணவு வகைகளில் கால்சியம் சத்து நமக்கு கிடைக்கிறது.




















