நெகிரி செம்பிலானில் நாய்களுக்கு கருத்தடை செய்ய RM100,000 ஒதுக்கீடு

(Our NS Reporter நாகேந்திரன் வேலாயுதம்)
நெகிரி செம்பிலான் மாநிலம் முழுவதும்  சுற்றித்திரியும் தெருநாய்கள் மற்றும் வீட்டு பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்கள் ஆகியவற்றுக்கு  கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனும் உத்தரவை மாநில அரசாங்கம் பிறப்பித்துள்ளது.
pack of dogsஇத்தகவலை நேற்று காலை இங்கு விஸ்மா நெகிரியில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டம் ஒன்றில் அம்மாநில வீடமைப்பு, ஊராட்சி மற்றும் போக்குவரத்து நடவடிக்கை துறை தலைவர் அருள்குமார் ஜம்புநாதன் அறிவித்தார்.
இம்மாநிலத்தில் பெரும்பாலன  குடியிருப்பு பகுதிகள் மற்றும்  சாலைகளில் நாய்கள் அதிகளவில் சுற்றி வருவதாலும், அதனால் ஏற்படும் தொல்லைகள் குறித்து வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சம் தெரிவித்தும், தொடர் புகார்கள் அளித்து வருவதை தொடர்ந்து, இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காணும் நோக்கத்தில், அண்மையில் கூடிய மாநில அரசு ஆட்சிக்குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.

இதனால், தெருநாய்களின் பெருக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில், தெரு நாய் களை பாதுகாப்பாக பிடித்து வந்து, கருத்தடை அறுவை சிகிச்சை செய்து, அவற்றை திரும்பவும் அடையாளம் காணப்படும்  பாதுகாப்பான இடத்திலேயே கொண்டு விடப்படும்.

இந்நடவடிக்கையை உதவ பிரானிகள் நல தன்னார்வ தொண்டு அமைப்புகள் முன் வந்துள்ள வேளையில், அத்திட்டத்திற்கு சிரம்பான் மாநகராட்சி மன்றம் 100,000 ரிங்கிட் நில ஒதுக்கீடு செய்துள்ளதையும் அருள்குமார் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களுக்கு, அதன் உரிமையாளர்கள்  இக்கருத்தடை நடவடிக்கையை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்றும், இதனை கடைப்பிடிக்க தவறும் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
மேலும் இதன் கண்காணிப்பு நடவடிக்கையை சம்பந்தப்பட்ட மாவட்டங்கள் இயங்கும் ஊராட்சி மன்றங்கள் மேற்கொள்ளும். அதே வேளை இத்திட்டம் குறித்த பிரச்சாரங்கள் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கிவிட்ட வேளையில், 2024 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி வரையில் அதன் பிரச்சார நடவடிக்கை தொடரும் என நீலாய் சட்டமன்ற உறுப்பினருமான அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here