ஜோகூர் பாரு:
கடல் உணவு பரிமாறும் உணவகம் ஒன்று, வாடிக்கையாளரிடம் அதிக விலை வசூலித்ததாக கூறப்படுவது தொடர்பில், குறித்த உணவக நடத்துனருக்கு உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1999 இன் பிரிவு 12ன் கீழ், தவறான விலை நிர்ணயம் செய்யப்பட்டதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக அமைச்சகத்தின் ஜோகூர் மாநில இயக்குநர் லிலிஸ் சஸ்லிண்டா போர்னோமோ கூறினார்.

மேலும் இந்த சம்பவத்தில் லாபம் ஈட்டப்பட்டதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க, கணக்கீட்டிற்கான முழுத் தகவலை உணவக நடத்துபவர் வழங்க வேண்டும் என்றும், வாடிக்கையாளரின் உரிமைகோரலைச் சரிபார்க்கவும், நோட்டீஸ் தொடர்பில் விரிவான தகவல்களை வழங்குவதற்குமாக குறித்த வணிகருக்கு நான்கு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது,” என்றும் அவர் கூறினார்.
முன்னதாக கடந்த செவ்வாயன்று (அக் 3), 26 வினாடிகள் கொண்ட ஒரு வீடியோவில், கடல் உணவு சாப்பிட்டதற்கு சம்பந்தப்பட்ட உணவகம் 1,260 ரிங்கிட் கட்டணம் வசூலித்தது என்று பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் தமது ஆதங்கத்தை சமூக வலைத் தளங்களில் பதிவிட்டிருந்தார் எனப்து குறிப்பிடத்தக்கது.

















