தைப்பிங்,
அண்மைக் காலமாக தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனைக்கு மேல் சாதனைகளை தமதாக்கி வருகின்றனர். மலேசிய புத்தக சாதனை, கின்னஸ் சாதனை, ஆசியளவில் சாதனை என சாதனைகளை தமிழ்ப்பள்ளிகள் தொடர்ந்தும் தமதாக்கி வருகின்றன.
அவ்வகையில் தேசிய அளவில் நடைபெற்ற தமிழ், சீனப் பள்ளி மாணவர்களுக்கான பிரதமர் கிண்ண மலாய் பேச்சுப் போட்டியில் கமுண்டிங் தமிழ்ப்பள்ளியின் நான்காம் ஆண்டு மாணவி தாரணி த/பெ சுப்பிரமணியம் முதல் பரிசை பெற்று சாதனை புரிந்துள்ளார்.
ஏற்கெனவே லாருட் மாத்தாங் செலாமா மாவட்ட அளவிலும் பின்னர் பேராக் மாநில அளவிலும் முதல் பரிசை பெற்ற தாரணி பெர்லிஸில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் முதல் பரிசு பெற்றிருப்பதன் வழி பள்ளிக்கும், சமுதாயத்திற்கும் பெருமையைப் பெற்றுத் தந்திருப்பதாக பள்ளியின் தலைமையாசிரியரான திருமதி உமாதேவி ரெங்கசாமி மகிழ்ச்சி தெரிவித்தார்.
அவருக்கான பரிசை கல்வித் துணையமைச்சர் லிம் ஹூய் இங் எடுத்து வழங்கி சிறப்பித்தார். இம்மாணவிக்கு பள்ளி ஆசிரியர்களான முகமட் அத்திஃப் பின் முகமட் ஹ்ர்ஷாட்,திருமதி தவமணி தேவேந்திரன் ஆகியோர் பயிற்சியளித்ததாக சம்பந்தப் பட்ட அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட தலைமையாசிரியர் உமாதேவி தெரிவித்தார். மாணவி தாரணி தைப்பிங் நகராண்மைக்கழக உறுப்பினர் சுப்பிரமணியம் ராமநாதனின் மகள் ஆவார்.

























