கோலாலம்பூர்:
மலேசிய அரச வளம் மற்றும் சுங்கத் துறை, 2025-ஆம் ஆண்டிற்கான தனது வருவாய் இலக்கை விட 8.93 பில்லியன் ரிங்கிட் கூடுதலாக வசூலித்து வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளது.
2025-இல் மொத்தம் RM76.18 பில்லியன் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தொடக்கத்தில் அந்த ஆண்டிற்கு RM67.25 பில்லியன் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த தொகை 2024-ஆம் ஆண்டு வசூலான RM65.57 பில்லியனுடன் ஒப்பிடுகையில், இது 16.18% உயர்வாகும்.
2022 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில் சுங்கத் துறையின் வருவாய் தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது என்று, சுங்கத் துறை இயக்குநர் ஜெனரல் டத்தோ அனிஸ் ரிசானா முகமட் ஜைனுதீன் கூறினார்.
வரி இணக்கத்தை உறுதிப்படுத்துதல், கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக வசதிகளை மேம்படுத்தியது போன்றவை இந்த வெற்றிக்கு முக்கியக் காரணங்களாகும்.
2024 மற்றும் 2025 என அடுத்தடுத்த இரண்டு ஆண்டுகளில், முந்தைய ஆண்டுகளை விட 10 பில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான கூடுதல் வருவாயைச் சுங்கத் துறை ஈட்டியுள்ளது என்று அவர் சொன்னார்.
மனிதவள மாற்றங்கள் மற்றும் சவால்கள் இருந்தபோதிலும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதன் மூலமும், செயல்பாடுகளை மறுசீரமைத்ததன் மூலமும் இந்த இலக்கை எட்ட முடிந்ததாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த அக்டோபர் 1, 2025 முதல், 22 நுழைவுப் புள்ளிகளில் பணியாற்றிய 1,053 சுங்க அதிகாரிகள், புதிய மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமைக்கு (MCBA) மாற்றப்பட்டுள்ளனர். இத்தகைய மாற்றங்களுக்கு மத்தியிலும் வருவாய் குறையாமல் சுங்கத் துறை சாதனை படைத்துள்ளது.
2026-ஆம் ஆண்டிற்கான வருவாய் இலக்குகள் குறித்து நிதி அமைச்சகத்துடன் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும், நாட்டின் நிதி நிலையை வலுப்படுத்தத் தொடர்ந்து பாடுபடப் போவதாகவும் டத்தோ அனிஸ் ரிசானா தெரிவித்தார்.





















