நாகையில் இருந்து இலங்கைக்குக் கப்பல் சேவை ; தொடங்கியது சோதனை ஓட்டம்

நாகப்பட்டிணம்:

நாளை (அக்.10) முதல் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்குப் பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்படுகிறது. அதற்குமுன்னதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

பயணிகள் யாரும் இல்லாமல் அந்தச் சோதனை ஓட்டம் நடைபெற்றது. அந்தச் சோதனை ஓட்டத்தில் 3 மணி நேரத்தில் கப்பல் இலங்கையைச் சென்று சேர்ந்து பின்னர் மாலை மீண்டும் நாகப்பட்டினத் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து இன்று திங்கட்கிழமையும் சோதனை ஓட்டம் நடைபெறும் என்று தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்குச் செல்ல ரூ.6,500 மற்றும் 18 விழுக்காடு ஜிஎஸ்டி வரி சேர்த்து ஒரு பயணிக்கு 7,670 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கப்பல் சேவைக்குப் பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது தங்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்தது என்றும் நாகை பகுதி மக்கள் கூறினர்.

பயணிகள் கப்பல் சேவையின் மூலம் பல்வேறு துறைகள் வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் பயணம் மேற்கொள்வர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here