ஜோகூர் பாரு:
சட்டவிரோதமாக பணம் கடன் வழங்கும் கும்பல் தொடர்புடையவர்கள் என நம்பப்படும் 8 பேரை கைது செய்துள்ளதாக ஜோகூர் காவல்துறைத் தலைவர் ஆணையர் டத்தோ கமாருல் ஜமான் மாமட் தெரிவித்தார்.
கோத்தா திங்கி, ஸ்ரீ ஆலாம் மற்றும் சிகாமாட் ஆகிய இடங்களில் அக்டோபர் 22 முதல் அக்டோபர் 25 வரை மேற்கொண்ட சோதனையில் 16 முதல் 43 வயதுக்குட்பட்ட எட்டு உள்ளூர் ஆண்கள் கைது செய்யப்பட்டனர் என்றும் அவர் கூறினார்.
கடனைத் தீர்க்கத் தவறியதற்காக கடன் வாங்கியவர்களை அச்சுறுத்தவும் மிரட்டவும் இந்த எட்டு பேரும் கடன் சுறாக்கள் எனப்படும் அந்தக் கும்பலின் மூலம் பணியமர்த்தப்பட்டதாக கமாருல் ஜமான் தெரிவித்தார்.
“கடன் வாங்கியவர்களின் வளாகத்தில் பெயிண்ட் அடித்தல் போன்ற செயல்களிலும் அவர்கள் ஈடுபட்டு வந்தனர் ” என்று கமாருல் ஜமான் நேற்று புதன்கிழமை (நவம்பர் 1) நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 15 மொபைல் போன்கள், மூன்று பெயின்ட் கேன்கள் மற்றும் மூன்று கார்களையும் போலீசார் கைப்பற்றியதாக கமாருல் ஜமான் கூறினார்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிண்டிகேட் செயல்பட்டு வருவதாகவும், பெயிண்ட் தெளிக்க RM600 மற்றும் தீ மூட்டுவதற்கு RM1,000 வழங்கப்படும் என்றும் கூறினார்.
மேலும் இவர்கள் சிங்கப்பூரை தளமாகக் கொண்ட முறையான பணக்கடன் வழங்குபவர் என்று கூறி, சட்டவிரோத கும்பலின் பணம் கொடுக்கும் வணிகத்தை பேஸ்புக்கில் விளம்பரம் செய்தார்கள் என்றும் அவர் கூறினார்.
இக்கும்பல் “சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்களை குறிவைக்கிறது, மேலும் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறினால் மலேசியாவில் உள்ள அவர்களது குடும்பங்களைப் பின்தொடர்வார்கள்” என்று கமாருல் ஜமான் கூறினார்.
குற்றவியல் சட்டம் பிரிவு 427 மற்றும் பிரிவு 435-ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார்.






















