லோவின் பிள்ளைகளுக்கு இஸ்லாமிய கல்வி போதிப்பது உள்ளிட்டவைகளுக்கு மைப்ஸ் செய்து கொண்ட மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது

தனித்து வாழும் தாயாரான லோ சியூ ஹோங்கின் 3 பிள்ளைகளுக்கு இஸ்லாமிய அடிப்படைக் கல்வியைப் போதிப்பது உட்பட சில பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக பெர்லிஸ் மாநில மலாய் இஸ்லாமிய பாரம்பரிய மன்றம் (மைப்ஸ்) செய்துகொண்ட மனுவை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நேற்று நிராகரித்தது. இந்த மனுவில் முகாந்திரம் ஏதும் இல்லை என்று நீதிபதி ஹயாத்துல் அக்மல் அப்துல் அஸிஸ் தமது தீர்ப்பில் குறிப்பிட்டார். இதற்கிடையே நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு நிருபர்களிடம் பேசிய 35 வயதான சியூ ஹோங், நீதிமன்றத்தின் நேற்றைய தீர்ப்பு தனக்கு நிம்மதி அளிக்கிறது என்றார்.

என் பிள்ளைகளுடன் அமைதியாக வாழ விரும்புகிறேன். அவ்வளவுதான். மற்றவர்கள் யாரும் எனக்குத் தொல்லை கொடுக்காமல் இருந்தால் அதுவே போதும். ஒரு தாய் எனும் முறையில் என் பிள்ளைகளின் கல்வி படிப்பின் மீது கவனம் செலுத்த விரும்புகின்றேன். நீதிமன்ற வழக்குப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்க முடியாது. நாங்கள் அமைதியாக வாழ விரும்புகிறோம். இதைத்தான் நாங்கள் கேட்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார். வேறு எந்தத் தரப்பினராவது நீதிமன்றத்தில் மனுச் செய்வார்களா எனக் கேட்டபோது, இந்த விஷயத்தை நான் கேட்கவே விரும்பவில்லை என்றார்.

இந்த வழக்கில் சியூ ஹோங் தரப்பில் ஜே. குணமலர் ஆஜரானார். என் கட்சிக்காரர் குழந்தைகளைப் பராமரிப்பதற்காகப் பெற்றுக்கொண்ட ஆணை நிலைநிறுத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அவருடைய 3 பிள்ளைகள் மதமாற்றம் செய்யப்பட்டது தொடர்பான மேல் முறையீட்டு மனு புத்ரா ஜெயாவிலுள்ள மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள வேளையில் குழந்தைப் பராமரிப்பு தொடர்பில் என் கட்சிக்காரர் பெற்ற நீதிமன்றத் தீர்ப்பு நிலைநிறுத்தப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here