பெய்ஜிங்: சீனாவின் முன்னாள் பிரதமர் லீ கெகியாங் திடீரென மாரடைப்பால் நள்ளிரவில் உயிரிழந்தாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சீனாவின் முன்னாள் பிரதமராக இருந்தவர் லீ கெகியாங்.. இவர் கடந்த 2013 முதல் 2023 வரை 10 ஆண்டுகள் சீனாவின் பிரதமராக இருந்தவர். சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் நம்பிக்கைக்குரிய தலைவர்களில் ஒருவராக லீ கெகியாங் இருந்தார்.
இதற்கிடையே 68 வயதான அவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஷாங்காய் நகரில் வசித்து வந்த அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
சீர்திருத்தங்கள் ஆர்வத்துடன் மேற்கொண்ட லீ கெகியாங், ஒரு காலத்தில் சீனாவின் நாட்டின் வருங்காலத் தலைவராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், ஜி ஜின்பிங் இவரை ஓவர்டேக் செய்து அதிபரானார். அதன் பிறகே ஜி ஜின்பிங் தலைமையில் அவருக்குக் கீழ் 10 ஆண்டுகள் பிரதமராக பணியாற்றினார். பெக்கிங் பல்கலைக்கழகத்தில் படித்த பொருளாதார வல்லுநரான இவர், பல சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
கடந்த 2020இல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் சீனாவில் 60 கோடிக்கும் அதிகமானார் மாதத்திற்கு $140 டாலருக்கு குறைவாகவே சம்பளம் பெறுவதாகக் கூறியிருந்தார். இது அப்போது சர்வதேச அளவில் சர்ச்சையைக் கிளப்பியது. சீனா வறுமையை ஒழித்துவிட்டதாகக் கூறி வந்த நிலையில், மாத வருமானம் இவ்வளவு குறைவாக இருந்தால் எப்படி வறுமையை ஒழிக்க முடியும் எனப் பல மேற்குல வல்லுநர்கள் கேள்விகளை எழுப்பினர்.


















