குவாந்தான்:
1990 களின் பிரபலமான ட்ராக் (rock) இசைக்குழுவின் பாடகர், நேற்று பகாங் சுல்தான் அஹ்மத் ஷா இஸ்லாமிய பல்கலைக்கழகம் ((Unipsas) அருகே ஜாலான் குவாந்தான்-மாரான் சாலையில் விபத்தில் சிக்கினார்.
காலை 10.45 மணியளவில், குறித்த பாடகர் ஓட்டிச் சென்ற BMW கார், யமஹா லெஜண்ட் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், அதில் பயணித்த 61 வயதான எடி குஸ்மிரன் அம்பி, என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று, குவாந்தான் மாவட்ட காவல்துறை தலைவர் துணை ஆணையர் வான் முகமட் ஜஹாரி வான் புசு கூறினார்.
முதற்கட்ட விசாரணையில், 53 வயதுடைய பாடகர் ஓட்டிச் சென்ற BMW கார் நகரத்திலிருந்து ரொம்பினுக்குச் சென்று கொண்டிருந்தபோது, விபத்து ஏற்பட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
“சம்பவம் நடந்த இடத்திற்கு வந்தபோது, பாதிக்கப்பட்டவர் சாலையின் இடது பாதையில் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் வலது பாதைக்கு மாறிவிட்டதாக நம்பப்படுகிறது.
“கார் ஓட்டுநரான பாடகர் குறித்த மோதலை தவிர்க்க முயன்றார், ஆனால் மோட்டார் சைக்கிளின் பின்புறம் கார் மோதியது. மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே இறந்தார், அதே நேரத்தில் கார் ஓட்டுநர் காயமடையவில்லை,” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக இங்குள்ள தெங்கு அம்புவான் அப்சான் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் பிரிவு 41(1)ன்படி வழக்கு விசாரிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.




















