கே. ஆர். மூர்த்தி
கூலிம், டிச. 29-
கெடா கோஜு கேன் கராத்தே டோ கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கராத்தே பொதுப்போட்டியில் யோகிஷா தனபாலன் வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்றார்.
கடந்த வாரம் அலோர்ஸ்டார் ஜாலான் ஸ்டேடியமில் அமைந்துள்ள ஸ்டார் பேரட் விளையாட்டு அரங்கில் இப்போட்டி நடத்தப்பட்டது. கெடா மாநில இளைஞர் விளையாட்டு மன்றத்தின் ஆதரவோடு கெடா கோஜு கேன் கராத்தே டோ கழகத்தின் தலைவர் சென்சே சாரூல் தலைமையில் நடைபெற்றது.
இப்போட்டியில் பெர்லிஸ், பினாங்கு, பேராக், பகாங், ஜோகூர் ஆகிய மாநிலங்களிலிருந்து 200 போட்டியாளர்கள் பங்கு பெற்றனர்.
கெடா மாநில கராத்தே கழகத்தைப் பிரதிநிதித்து 10 பேர் கலந்துகொண்டனர். அவர்களில் யோகிஷா தனபாலன் 15, 16 வயதிற்கான பிரிவில் குமித்தே கேடட் பிரிவில் வெள்ளி பதக்கமும் பெண்களுக்கான குமித்தே பொதுப்போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.
இவரின் வெற்றிக்கு கெடா மாநில கராத்தே கழகத்தின் தலைவர் மாஸ்டர் எஸ். ஸ்டாலின், கெடா மாநில தலைமைப் பயிற்றுநர் மாஸ்டர் ப. தியாகராஜன் ஆகிய இருவரும் உறுதுணையாக இருந்துள்ளனர்.
இதற்கிடையே இம்மாதம் 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை கோலாலம்பூரில் முத்தியாரா உள் அரங்கில் தேசிய வெளியூர்களுக்கான பொதுக் கராத்தே போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் கெடா மாநில கராத்தே கழகத்தைப் பிரதிநிதித்து சிவானி முத்து மகேந்திரன் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இவர் பாடாங் மேஹா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் ஆரம்பக் கல்வியை மேற்கொண்டு இப்பொழுது பாடாங் செராய் இடைநிலைப்பள்ளில் படித்து வருகின்றார்.
கெடா மாநில கராத்தே கழகத்தின் தலைவர் மாஸ்டர் எஸ். ஸ்டாலின் தலைமையில் இவர் பல ஆண்டு காலமாக கராத்தே பயிற்சியை மேற்கொண்டு பல போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாணவிகள் இருவருக்கும் மலேசியா ஓகினோவா கோஜூ ரியோ சம்மேளத்தின் தேசியத் தலைவரும் கராத்தே மாஸ்டருமான மஹாகுரு கே. ஆனந்தன் முன்னிலையில் மாஸ்டர் எஸ். ஸ்டாலின் தலைமையில் சிறப்பு செய்யப்பட்டது.










