கோலாலம்பூர்:
கோழி விலை நேற்று முதல் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப அமல்படுத்தப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் தங்களது பணக் கையிருப்பைக் கவனத்தில் கொண்டு விலை ஒப்பீடு செய்து அதனை வாங்க வேண்டும் என்று மலேசியப் பயனீட்டாளர் சங்கங்களின் சம்மேளனம் (போம்கா) அறிவுறுத்தி இருக்கிறது.
உள்நாட்டு வாணிப வாழ்க்கைச் செலவின அமைச்சு அறிமுகம் செய்திருக்கும் பிரைஸ் கேச்சர் (Price Catcher) செயலியில் பொருட்களின் விலைகளை ஒப்பீடு செய்து விவேகமான முறையில் வாங்கும் சிந்தனையை பொதுமக்கள் கொண்டிருக்க வேண்டும் என்று போம்கா தலைமைப் பொருளாளர் நூர் அஷிக்கின் அமினுடின் நேற்று வலியுறுத்தினார்.
சந்தை நிலவரத்திற்கு ஏற்ப விலைகள் இருக்கும்பட்ங்த்தில் பயனீட்டாளர்கள் தங்களுக்கு வேண்டியதைத் தேர்வு செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். விநியோகம், தேவைகளின் அடிப்படையில் பொருட்களின் விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்நிலையில் பயனீட்டாளர்கள் விவேகத்துடன் செயல்பட வேண்டும்.
பிரைஸ் கேச்சர் செயலியில் கோழி விலையை மட்டும் ஒப்பிட வேண்டாம். மாறாக, இதர அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையும் ஒப்பிட்டுப் பார்த்து எங்கு குறைவாக இருக்கிறதோ அங்கு அவற்றை வாங்கிக் கொள்ளலாம். அதே சமயம் கோழி விலை தேவையற்ற முறையில் அதிகரிக்குமேயானால் அது குறித்து உள்நாட்டு வாணிப, வாழ்க்கைச் செலவின அமைச்சிடம் புகார் செய்ய வேண்டும் என்றும் அவர் பயனீட்டாளர்களுக்கு ஆலோசனை கூறினார்.
விலை அதிகரிப்பு குறிப்பிடத்தக்க வகையில் இருந்தால் ஏதோ தவறு நடந்திருக்கிறது. உடனடியாக அமைச்சிடம் புகார் செய்தால் விரைந்து அதன் தொடர்பில் புலன் விசாரணை மேற்கொள்ளப்படும். கொள்ளை லாபம் சம்பாதிப்பதை நோக்கமாகக் கொண்டு சில வியாபாரிகள் கண்மூடித்தனமாக கோழி விலையை அதிகரிக்கலாம். இதற்குப் பொதுமக்கள் நினைத்தால் மட்டுமே தீர்வுகாண முடியும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
கோழிக்கான உதவித் தொகையை அரசாங்கம் கடந்த அக்டோபர் 31ஆம் தேதியோடு நிறுத்திக்கொண்டு விட்ட நிலையில் சந்தை நிலவரத்திற்கேற்ப கோழி விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.