கோலாலம்பூர் | மார்ச் 18, 2026/
செபெராங் ஜெயா மருத்துவமனை (HSJ) வளாகத்தில் உள்ள பாலர் பள்ளியில், கடந்த மார்ச் 9-ஆம் தேதி நான்கு மாத ஆண் குழந்தை உயிரிழந்ததற்குக் காரணம் ‘நீரில் மூழ்கியதே’ என்று உடற்கூறு ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
மார்ச் 9 அன்று அதிகாலை 4:20 மணியளவில், ஹய்ல் ஹாரித் முஹமட் ஷஃபீஸ் என்ற குழந்தை சுயநினைவற்ற நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு வரப்பட்டது. ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு குழந்தை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
உடற்கூறு பரிசோதனை அறிக்கை மரணத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்தியுள்ளதாகவும், இறுதி விசாரணை அறிக்கை விரைவில் பொது வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும் என்றும் பினாங்கு காவல்துறை தலைவர் டத்தோ அஸீஸி இஸ்மாயில் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக, அந்தப் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த இரண்டு பெண் ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களது தடுப்புக்காவல், தண்டனைச் சட்டத்தின் 302-வது பிரிவின் (கொலை) கீழ் விசாரணைக்காக மார்ச் 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் ஒரு செவிலியர் ஆவார். அவர் இரவுப் பணிக்குச் சென்றபோது, மருத்துவமனை வளாகத்தில் உள்ள 24 மணி நேரக் குழந்தை பராமரிப்பு மையத்தில் குழந்தையை விட்டுச் சென்றபோது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.




















