செப்பாங்:
வரும் ஜனவரி மாதம் முதல் சிங்கப்பூரிலிருந்து மலேசியா செல்லும் பயணிகள் அங்கு மின்னிலக்க வருகைப் பதிவு அட்டையை நிரப்ப வேண்டியதில்லை என்று கூறப்பட்டுள்ளது. எனினும், மலேசியாவுக்கு வருகை புரியும் மற்ற நாட்டுப் பயணிகள் அந்த மின்னிலக்க வருகைப் பதிவு அட்டையை நிரப்புவது கட்டடாயம் என்று நினை வுறுத்தப்பட்டுள்ளது.
மின்னிலக்க வருகைப் பதிவு முறையில் இருந்து அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் விலக்கு அளிக்கப்படும்,”என்று உள்துறை அமைச்சர் சைஃபுதின் நசுஷன் இஸ்மாயில் கோலாலம்பூர் விமான நிலையத்தில் டிசம்பர் 5ஆம் தேதி செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
இது பற்றி விளக்கமளித்த அவர், சில சிங்கப்பூரர்கள் மலேசியாவுக்குள் கிட்டத்தட்ட அன்றாடம் வருகையளிக்கின்றனர். எனவே அவர்களுக்கு விலக்கு அளிப்பது உண்மை நிலவரத்துக்கு ஏற்புடையது, என்றார்.
சிங்கப்பூரர்கள் தவிர, தூதரகக் கடவுச்சீட்டு வைத்திருப்போர், மலேசிய நிரந்தர வாசிகள், புருணை அடையாள அட்டை வைத்திருப்போர் மற்றும் தாய்லாந்து எல்லை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் ஆகியோரும் மின்னிலக்க வருகைப் பதிவு செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளவர்கள்.
சிங்கப்பூரர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்கு, ஜோகூரில் உள்ள தெற்கு முனை நுழைவாயில்களுக்கு மட்டும் என்றில்லாமல், அனைத்து நுழைவாயில்களுக்கும் பொருந்தும் என்று மலேசிய உள்துறை அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
























