வீடு முழுக்க வேதனைத் தீ

 

செய்தி : டில்லிராணி முத்து

வீடுமுழுக்க வேதனையே தீயாக எரிந்து கொண்டிருந்தால் எங்கே ஒளிர்வது சாதனைத் தீ எனக் கேள்வி எழுப்புகிறார் கடுமையான நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு முட்டி வரை தன் வலது காலை இழந்தது மட்டுமன்றி தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்து தவிக்கும் காளியம்மா இராமன் ( வயது 38).

     இவர் தன் மகன் செல்வம் த/பெ ஹரிதாஸ் (15 வயது), தன் வயது முதிர்ந்த மாமனார், மாமியாருடன் எண் 733, தாமான் டேசா பக்தி, ஜாலான் கம்போங் பஞ்சார், தெலுக் இந்தான் எனும் முகவரியில் வசித்து வருகிறார். நான் தற்போது உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருவதால் பள்ளிக்குச் சென்று கல்வி கற்க வேண்டிய என் மகன் செல்வம் அவனுடைய கல்வியைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு முழு நேரமும் என்னைக் கவனித்துக் கொள்கிறான்.

      குடும்பத்தில் வறுமை என்பதால் மகள் ஹ. பத்மமாலினியை (13 வயது) தன் அண்ணன் அவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டார் என்று காளியம்மா தெரிவித்தார். சிறு வயது முதல் செல்வத்திற்கு வாழ்க்கையில் நிறைய சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் நான் படுத்த படுக்கையானப் பிறகு அவனுடைய கனவு, ஆசை எல்லாம் வெறும் கற்பனையில் மட்டுமே முடிந்தது என கண் கலங்கினார் காளியம்மா. பல கனவுகளோடும் ஆசைகளோடும் எதிர்பார்ப்போடும் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்த என் மகனுக்குத் தொடர்ந்து கிடைத்தது அதிர்ச்சியும் வேதனைக்கு மேல் வேதனையும் சோதனைக்கு மேல் சோதனையும் மட்டும்தான் என்றார் அவர்.

     என்னுடைய 22 வயது தொடங்கி நான் கடுமையான நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வந்தேன். மூன்று ஆண்டுகளுக்கு முன் என்னுடைய வலது காலில் புண் ஏற்பட்டது. முட்டி வரை என் வலது கலை நீக்கி விட்டனர். அது ஒருபுறம் இருக்க சில மாதங்களுக்கு முன்பு என்னை கழிப்பறைக்கு அழைத்துச் செல்வதற்காக செல்வம் கட்டிலிலிருந்து என்னைத் தூக்கியபோது இருவரும் தடுமாறி கீழே விழுந்ததில் எனது இடது கால் உடைந்து விட்டது. எனவே அறுவைச் சிகிச்சையின் மூலம் மருத்துவர்கள் என் இடது காலினுள் பிளேட் வைத்துள்ளனர் என்றார் காளியம்மா.

     அதுமட்டுமன்றி பல வருடங்களாக கடுமையான நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் பல மாதங்களுக்கு முன்பு என் இரு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் தெலுக் இந்தான் பெரிய மருத்துவமனையில் 6 முறை மட்டும் தான் சிறுநீரகச் சுத்திகரிப்பு செய்தேன். அதன்பிறகு மருத்துவர்கள் என்னை தனியார் சுத்திகரிப்பு மையத்தில் சொந்தமாக பணம் செலுத்தி சிறு நீரகச் சுத்திகரிப்பு செய்து கொள்ளுமாறு கூறிவிட்டனர்.

     தனியார் சிறுநீரகச் சுத்திகரிப்பு மையத்தில் சுத்திகரிப்பு செய்ய வேண்டும் என்றால் ஒருமுறைக்கு 300 ரிங்கிட் வரை செலுத்தியாக வேண்டும். ஆனால் என்னிடமோ அவ்வளவு பணம் இல்லததால் கடந்த 2 மாதங்களாக சிறு நீரகச் சுத்திகரிப்பு செய்யவில்லை. இதனால் என் கை, கால்கள் உள்ளிட்டு உடம்பின் சில பகுதிகள் வீங்கி காணப்படுகிறது என்றும் குடும்பமாது காளியம்மா தனது குமுறலை வெளிப்படுத்தினார்.

     கணவர் இருக்கும்போது அவர் என்னை நன்கு கவனித்துக் கொண்டார். இப்போது என் மகன் செல்வம் தான் முழு நேரமும் ஒரு தாயைப் போல் என்னை கவனித்துக் கொள்கிறான். என்னைக் கவனித்துக் கொள்வதால் அவனால் பள்ளிக்கும் செல்ல  முடியவில்லை , வேலைக்கும் செல்ல  முடியவில்லை. நாங்கள் தங்கியிருப்பதோ வாடகை வீட்டில். மாமனார், மாமியார் இருவரும் தோட்டத்தில் கூலி வேலை செய்து அதிலிருந்து கிடைக்கும் சிறுதொகை பணத்தைக் கொண்டு தான் வீட்டு வாடகை, மின்சாரம், குடி நீர் போன்றவற்றிற்கு பணம் செலுத்துகின்றனர்.

     அந்நிலையில் என் மருத்துவச் செலவிற்கும் பெம்பர்ஸ் வாங்குவதற்கும் என்னிடம் பணம் இல்லை. கணவர் இன்றி நானும் என் மகன் செல்வனும் பெரும் சிரமங்களையும் இன்னல்களையும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். பல நேரங்களில் உண்ணுவதற்கு கூட வீட்டில் அரிசி, உணவுப் பொருட்கள் இருக்காது. என் அம்மா தொடர்ந்து உயிர் வாழ வேண்டுமாயின் அவர் கண்டிப்பாக சிறுநீரக சுத்திகரிப்பு செய்தாக வேண்டும். ஆனால் எங்களிடம் பணம் இல்லாததால் கடந்த 2 மாதங்களாக அம்மாவுக்கு சிறுநீரகச் சுத்திகரிப்பு செய்ய முடியவில்லை. வேறு வழி இல்லாத நிலையில் என் அம்மாவின் உயிரைக் காப்பாற்ற பொதுமக்களின் உதவியை நாடுகிறேன்.

     என் அம்மாவுக்கு சிறுநீரகச் சுத்திகரிப்பு செய்வதற்கும் பம்பர்ஸ் வாங்குவதற்கும் நாங்கள் சாப்பிடவும் பொதுமக்கள் எங்களுக்கு உதவ முன் வர வேண்டும் என சிறுவன் செல்வம் கேட்டுக் கொண்டார். தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஙா கோர் மிங், பேராக் மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சிவநேசன் அச்சலிங்கம், வூ கா லியோங் ஆகியோர் என் அம்மா தெலுக் இந்தான் பெரிய மருத்துவமனையில் சிறுநீரகச் சுத்திகரிப்பு செய்வதற்கு வழி செய்ய வேண்டும் எனவும் சிறுவன் செல்வம் கேட்டுக் கொண்டார்.

     பல இன்னல்களுக்கிடையிலும் சிரமங்களுக்கிடையிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்ப மாது காளியம்மாவுக்கும் அவரின் மகன் செல்வத்திற்கும் உதவ எண்ணம் கொண்டுள்ள பொதுமக்கள் 011-31240418 அல்லது 016-6810787 என்ற எண்களில் தொடர்பு கொண்டு இவர்களுக்கு உதவ முன் வரலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here