சீனா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 134 ஆக உயர்வு

வடமேற்கு சீனாவின் கன்சு, குயின்காங் ஆகிய மாகாணங்களில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் தென் சீனக்கடலுக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் உருவானதாக சீன வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதனால் சீனாவில் கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 127 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்தநிலையில் பலி எண்ணிக்கை 134 ஆக உயர்ந்துள்ளதாகவும், 980 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்த நாட்டின் பேரிடர் மீட்புத்துறை தெரிவித்துள்ளது. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட சீனாவுக்கு உதவ தைவான் முன்வந்துள்ளது. தைவான் அதிபர் சாய் இங்-வென் தனது வலைத்தள பக்கத்தில், கடினமான இயற்கை பேரிடர் மீட்பு பணியில் சீனாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தைவான் தயாராக உள்ளது என்று கூறியுள்ளார்.

சுயாட்சி பெற்ற நாடாக தன்னை தைவான் அறிவித்தாலும், சீனா அந்நாட்டின் மீது முழு உரிமை கொண்டாடி வருகிறது. இதனால் சீனாவிற்கும் தைவானுக்கும் இடையே பதற்றம் நிலவி வரும் சூழலில், சீனா தனது உரிமையை நிலைநாட்ட தைவானின் வான்வெளியிலும், நீர்பரப்பிலும், தனது ராணுவ ஆதிக்கத்தை அதிகரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here