பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ‘கொகெய்ன்’ போதைப்பொருள்… சுவிட்சர்லாந்தின் விபரீத முடிவு!

சுவிட்சர்லாந்தில் இனி கொகெய்ன் போதைப்பொருள் மீதான சட்டபூர்வ தடை விலக்கிக்கொள்ளப்பட இருக்கிறது.

அரசு அனுமதியுடன் போதைப்பொருளை உபயோகிக்கும் விநோதமும் அங்கே அரங்கேற இருக்கிறது.

உலகம் முழுமைக்குமே போதைப்பொருட்களை தடைசெய்வது மற்றும் மக்கள் பயன்பாட்டில் இருந்து கட்டுப்படுத்துவதில் பெரும் தடுமாற்றம் தென்படுகிறது. போதைப்பொருள் உபயோகத்தால் எழும் தீங்குகளைக் காட்டிலும், அவற்றின் பின்புலத்தில் உருவாகும் கிரிமினல்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் உள்ளிட்டவை அரசுக்கு பெரும் சவாலாகின்றன.

கள்ள சந்தையில் கிடைக்கும் வீரியம் மிக்க மற்றும் கலப்பட போதைப்பொருளால் குடிமக்கள் உயிருக்கும் ஆபத்தாகிறது.

இந்நிலையில் போதைப்பொருள் உபயோகம் மற்றும் அவற்றை சார்ந்த வணிகத்தை முறைப்படுத்த, போதைப்பொருள் விற்பனையை அரசு கண்காணிப்பில் நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் உலகம் முழுக்க தலைதூக்கியுள்ளன.

அந்த வகையில் ’கஞ்சா’ போதைப்பொருள் பயன்பாடு உலகின் பல்வேறு நாடுகளில் அனுமதிக்கப்பட்டு வருகிறது. மேலும் சில போதைப்பொருட்கள், சிகிச்சைக்கான மருந்துப்பொருள் என்ற வகைப்பாட்டின் கீழ் சட்ட அமைப்புகளின் அனுமதி மற்றும் மருத்துவ ஆலோசனையின் பரிந்துரை ஆகியவற்றில் பெயரில் கிடைக்கப்பெறுகின்றன.

இந்தியாவின் பல மாநிலங்களில் இந்த வகையில் கள்ளச்சாராயத்துக்கு எதிர் நடவடிக்கை என்ற பெயரில் மதுபானங்கள் விற்பனை கனஜோராக நடந்து வருகிறது. மது, கஞ்சா வரிசையில் வீரிய போதை ரகமான கொகெய்ன் விற்பனைக்கும் ஒரு சில நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றன.

ஸ்பெயின், இத்தாலி மற்றும் போர்ச்சுக்கல் நாடுகளில் கொகெய்ன் போதைப்பொருள் வைத்திருந்தால் சிறைத்தண்டனை இல்லை. மருந்துகொள்கையின் அடிப்படையில் அமெரிக்காவின் சில மாகாணங்களில், சிகிச்சையின் பெயரில் சிறிய அளவில் கொகெய்ன் வைத்துக்கொள்வது 2021 முதல் குற்றம் கிடையாது.

ஐரோப்பாவிலேயே அதிகப்படி கொகெய்ன் பயன்பாட்டில் மிதக்கும் சுவிட்சர்லாந்தில் அதனை முறைப்படுத்த முன்னோடித்திட்டம் ஒன்றை கொண்டுவருகிறார்கள்.

தலைநகர் பெர்னில் முதல்கட்டமாக இது கொண்டுவரப்படுகிறது. “போதைப்பொருள் மீதான எங்களது போர் தோல்வியடைந்துள்ளது.எனவே புதிய யோசனைகளை பரிசீலிக்கிறோம். வெறும் அடக்குமுறையை விட, கட்டுப்பாடு மற்றும் சட்டப்பூர்வமாக்குதல் மூலம் சாதிக்க முயல்கிறோம்” என்று ஆட்சியாளர்கள் வாதிடுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here