நம்பிக்கை இழந்த பிரிட்டன்.. குதிரை கொம்பான வேலைவாய்ப்பு! ரிஷி சுனக்கை சாடும் தொழிலாளர்கள்

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் வருவாய் ஈட்டும் முக்கிய நாடாக இருக்கும் பிரிட்டனில் தற்போது வேலைவாய்ப்பு இல்லாமல் தமிழர்கள் திண்டாடுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

வெளிநாட்டு வேலை: தெற்காசிய நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் பல கோடிக்கணக்கானோர் வளைகுடா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் தங்கி பணிபுரிந்து வருகிறார்கள். இதைவிட அதிக வருமானம் எதிர்பார்த்தும் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று மக்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் ஆண்டுகளாக முதன்மை தேர்வாக இருந்து வருகின்றன.

குறிப்பாக தமிழர்கள் இந்த நாடுகளில் அதிகளவில் வசித்து வருகிறார்கள். மென் பொருள் நிறுவனங்களில் பணிபுரிந்துவிட்டு ஆன் சைட் மூலமாக இந்த நாடுகளுக்கு செல்பவர்களை விட பல லட்சம் செலவு செய்து கூலித் தொழில், உணவகங்கள், கடைகள், டிராவல்ஸ்களில் ஓட்டுநராகவும், சர்வராகவும், விற்பனை பிரதிநிதியாகவும், அலுவலக உதவியாளராகவும் பணிபுரிபவர்களே அதிகம். இந்தியாவில் படித்துவிட்டு வேலை செய்யும்போது கிடைக்கும் ஊதியத்தைவிட இந்த நாடுகளில் படிக்காமல் இதுபோன்ற முறைசாரா தொழில்களில் கிடைக்கும் வருமானம் அதிகம் என்பதால் 5 முதல் 10, 15 லட்சங்கள் வரை செலவு செய்து பிரிட்டனுக்கு சென்று பணிபுரிந்து வருகிறார்கள்.

இப்படி பொருளாதார ரீதியாக முன்னேறியவர்கள் ஏராளம். இவர்களை பார்த்து பலரும் கடன் வாங்கி பிரிட்டனுக்கு சென்று வருகிறார்கள். இந்தியா உள்ளிட்ட காமன்வெல்த் நாடுகளுக்கு பிரிட்டன் வழங்கும் விசா, மாணவர் விசா போன்ற பல விசாக்களை எடுத்துக்கொண்டு பிரிட்டன் சென்று வருகிறார்கள். இந்த நிலையில்தான் பிரிட்டனில் பணிபுரியும் தமிழர்கள் உட்பட அனைத்து வெளிநாட்டவர்களுக்கும் தலைமேல் இடியாக விழுந்திருக்கிறது வேலைவாய்ப்பின்மை மற்றும் ஊதிய குறைப்பு நடவடிக்கைகள்.

ப்ரெக்சிட், கொரோனா பரவல், உக்ரைன் – ரஷியா யுத்தம், சர்வதேச பொருளாதார மந்தநிலை போன்றவற்றால் பிரிட்டனில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் அங்கு பணிபுரியும் வெளிநாட்டு தொழிலாளர்கள் பலர் வேலையிழப்பை சந்தித்து வருகிறார்கள். வேலையிழப்பு மட்டுமின்றி பலருக்கு ஊதிய குறைப்பும் நடந்திருக்கிறது. சில நிறுவனங்களில் தொழிலாளர் எண்ணிக்கை குறைத்துவிட்டு சிலரிடம் ஓவர் டைம் முறையில் வேலை வாங்கி வருவதாக அங்கு பணிபுரியும் தமிழர்கள் தெரிவிக்கிறார்கள்.

அதேபோன்று பிரிட்டனில் பணிபுரியும் நோக்கில் மாணவர் விசாவில் வந்து பகுதிநேர வேலை செய்து வந்தவர்கள், பணியாளர் விசாவாக மாற்றும் கால வரம்பு உயர்த்தப்பட்டது, ஸ்பான்ஷர்ஷிப் கட்டணத்தை உயர்த்தியது என பல ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமரான பிறகு கொண்டு வரப்பட்ட விதிகளால் அங்கு பணிபுரியும் இந்தியர்கள் பலரும் பாதிக்கப்பட்டு உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். ரிஷி சுனக் அரசு கொண்டு வரும் வெளிநாட்டு தொழிலாளர்கள், விசா தொடர்பான சட்டத்திருத்தங்களால் அவர் மீது மட்டுமின்றி அங்கு பணிபுரியும் இந்திய தொழிலாளர்கள் மீதும் மற்ற நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் கோபத்தை காட்டுவதாக அங்கு பணிபுரிந்து வரும் தமிழர் ஒருவர் தெரிவித்தார்.

பிரிட்டனின் பொருளாதார சூழல் எப்போது பழைய நிலைக்கு திரும்பும்? எப்போது தங்கள் தேவைகள், கனவுகள் நனவாகும் என ஏக்கத்துடன் காத்துள்ளதாக தெரிவிக்கின்றனர் பிரிட்டன் வாழ் இந்தியர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here