இந்தியர்களுக்கு தொடர் ஏமாற்றங்கள்; இதுதான் அன்வாரின் நோக்கமா?

 

செய்தி: கவின்மலர்

பாரிட் புந்தார், டிச.27 – நம்பி வாக்களித்த இந்தியர்களுக்கு அல்வா கொடுப்பதுதான் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் நோக்கமா? என்பதுதான் இன்று நாடு முழுவதிலுமுள்ள இந்தியர்கள் எழுப்பும் ஒருமித்த கேள்வியாக உள்ளது.

2.9.1998ஆம் தேதி கைது செய்யப்பட்டு அனைத்து அரசாங்கப் பதவிகளும் அம்னோ பதவிகளும் பறிக்கப்பட்டு அன்வார் சிறை சென்றபோது ஓர் அனுதாப அலை ஏற்பட்டது. அதன் பயனாக அன்வாருக்கு ஆதரவாக தொடங்கப்பட்ட ரிஃபோர்மார்சி எனும் சீர்திருத்தப் போராட்டத்திலும் 20.9.1998ஆம் தேதி அவரின் துணைவியார் தலைமையில் தொடங்கப்பட்ட மக்கள் நீதிக் கட்சியான பி‌கே‌ஆரிலும் இந்தியர்கள் ஆதரவு பெருகியது.

2007ஆம் ஆண்டு ஹிண்ட்ராஃப் போராட்டத்திற்க்குப் பின்னர் அதுவே மிகப் பெரிய ஆதரவு அலையாக மாறியது. அவரது கட்சி உறுப்பினர்களில் 40 விழுக்காட்டுக்கும் மேற்பட்டவர்கள் இந்தியர்களே என்று சொல்லும் அளவிற்கு அதன் ஆதரவு உயர்ந்தது.

கடந்த 12 ஆவது பொதுத் தேர்தல் தொடங்கி 15ஆவது பொது தேர்தல் வரை கட்சியின் வெற்றிக்காகவும் கூட்டணியின் வெற்றிக்காகவும் பெரும்பாடுபட்டவர்கள் இந்தியர்கள் என்பதை யாரும் மறுத்து விட முடியாது. அதன் பயனாகத்தான் ஜ.செ.க.வின் பெருந்தலைவர்கள் ஒன்றிணைந்து தஞ்சோங் 1,2,3 என்று பல முறை முயன்றும் பினாங்கு மாநில ஆட்சியை கைபற்ற முடியாமல் போனவர்கள் இந்தியர்களின் பேராதரவால் 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பினாங்கு மாநிலத்தை மட்டுமல்ல சிலாங்கூரையும் அதனைத் தொடர்ந்து கெடா, பேராக், கிளாந்தானையும் சேர்த்து மொத்தம் ஐந்து மாநிலங்களையும் கைபற்றினர். இவ்வாறு 85 விழுக்காட்டிற்கும் அதிகமான ஆதரவை வழங்கி ஆட்சிக் கட்டிலில் அமர வைத்து அழகு பார்த்த இந்திய சமுதாயத்திற்கு அன்வார் செய்யும் கைமாறுகள் இவைதானா? என்று கேட்கும் அளவிற்கு அவரது ஓராண்டு ஆட்சி கேள்விக்குறி ஆகியிருக்கிறது.

கல்வி அமைச்சின் ஆலோசனை மன்றத்தில் தமிழ் தெரியாத சீக்கியரை நியமித்தது தொடங்கி ஒவ்வொரு நியமனத்திலும் அறிவிப்பிலும் இந்தியர்களுக்கு ஏமாற்றத்திற்கு மேல் ஏமாற்றத்தை மட்டும் அன்வார் வழங்கி வருகிறார். பினாங்கு மாநில துணை முதல்வர் நியமனத்திலும் அதே அணுகுமுறையைத்தான் அன்வார் கடைபித்தார்.

பேராசிரியர் ப.இராமசாமி வகித்த பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பதவியை சீக்கியரிடம் தாரைவார்துக் கொடுத்தபோது கூட்டணியின் தலைவர் என்ற முறையில் அன்வார் கண்டும் காணாமல் இருந்தார்.

அமைச்சரவை மாற்றத்தின் போது ஓர் இந்திய தமிழரை நியமனம் செய்யாமல் மீண்டும் ஒரு சீக்கியரை நியமித்துள்ளார். அது தொடர்பான இந்தியர்களின் அதிருப்தி அலை அடங்குவதற்கு முன்னரே மற்றோர் அதிருப்தி அலையை ஏற்படுத்தும்  வகையில் (கில்லிங்) ‘கே’ என்ற சொல்லைச்  சொல்லி இந்தியர்களைக் கேவலப்படுத்தினார். இப்போது பிரதமர் துறையின் கீழ் இருந்த மித்ராவை ஒற்றுமை அமைச்சின் கீழ் மாற்றும் திட்டத்தை பிரதமர் அறிவித்ததன் வழி இன்னுமோர் அதிர்ச்சி அலையை பிரதமர் ஏற்படுத்தி இருக்கிறார்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் காலத்தில் பிரதமர் துறையின் கீழ் 2013ஆம் ஆண்டு முதல் செயல்பட்ட செடிக் ( SEDIC ) 2018 ஆம் ஆண்டு மித்ரா என்ற பெயரில் அப்போதைய பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் ஒற்றுமைத் துறையின் கீழ் கொண்டுவந்தார்.

பல முயற்சிகளுக்குப் பிறகு ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனின் வலியுறுத்தலால் அன்றைய பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மித்ராவை 2022ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் பிரதமர் துறையின் கீழ் செயல்படச் செய்தார். ஏறத்தாழ ஓராண்டு மட்டுமே கடந்துள்ள நிலையில் அதனை மீண்டும் இப்போது அன்வார் ஒற்றுமை அமைச்சின் கீழ் கொண்டு வந்துள்ளார்.

மித்ராவின் வழி இந்திய சமுதாயத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த மேலும் பல திட்டங்களும் அதிகரிக்க வேண்டிய நிதி உதவிகளைப் பற்றியும் இந்திய சமுதாயம் குரல் எழுப்பிவரும் காலத்தில் பிரதமர் அன்வார் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் மித்ராவை துறை மாற்றம் செய்வதில் முன்னுரிமை தந்திருப்பதின் நோக்கம் என்ன? தனி மனித அரசியலுக்கு ஆளவட்டம் கட்டி ஆடவா?

ஏதுமில்லாதபோதே ஏகபோக வசனம் பேசும் ஒற்றுமைத் துறையின் துணையமைச்சர் இதற்குப் பிறகு என்னென்ன நாடகங்களை எல்லாம் அரங்கேற்றப் போகிறாரோ என்ற ஆதங்கம் பலரது மனங்களில் இப்போது எதிரொலிக்கத் தொடங்கிவிட்டது. ஏற்கெனவே இந்திய சமுதாயத்தை கருவறுக்க மகாதீர் தமது பதவிக் காலத்தில் என்னென்ன எல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்து விட்டார். இப்போது வந்துள்ள பிரதமரும் அவரது அடிச்சுவட்டைப் பின்பற்றி இந்தியர்களை ‘கே’ என்ற சொல்லால் கேவலப்படுத்தியதோடு அவரைப் போலவே இவரும் மித்ராவை பிரதமர் துறையின் கீழிருந்து ஒற்றுமைத் துறையின் கீழ் கொண்டுவந்துள்ளார்.

இன்னும் எதை எல்லாம் அவரது பாணியில் இந்தியர்களிடம் இருப்பதையும் அன்வார் கெடுக்கப் போகிறார் என்பதை இந்திய சமுதாயம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. பொறுத்தது போதும், பொங்கி ஏழு என்ற நிலையில் வரும் 16ஆவது பொதுத் தேர்தலில் தீர்ப்பை திருத்தி எழுத இந்திய சமுதாயம் தயாராகி வருகிறது என்பது மட்டும் உண்மை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here