ஜோகூர் பாரு:
கடந்த சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 9) வரையான காலப்பகுதியில் பொந்தியான் மற்றும் மெர்சிங்கில் உள்ள நிவாரண மையங்களில் தங்கியிருந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் இருவருக்கு மட்டும் கோவிட் -19 தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அங்கு நிவாரண மையங்களில் தங்கியிருந்தவர்களில் மொத்தம் 938 பேர் சுகாதாரத்துறையால் பரிசோதிக்கப்பட்டதாக மாநில சுகாதாரம் மற்றும் ஒற்றுமைக் குழுத் தலைவர் லிங் தியான் சூன் தெரிவித்தார்.
சோதனைகளில் நேர்மறையான பதிலைப் பெற்றவர்கள் அங்குள்ள மருத்துவ மற்றும் சுகாதார குழுக்களின் மேற்பார்வையின் கீழ், அதே நிவாரண மையத்தில் ஒரு தனி அறையில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.
மொத்தம் 61 தொற்று நோய்கள் கண்டறியப்பட்டுள்ளன, அதாவது 53 கடுமையான சுவாச நோய்த்தொற்றுகள், இரண்டு வெண்படல தொற்றுக்கள் மற்றும் மூன்று தோல் நோய் மற்றும் கடுமையான இரைப்பை குடல் அழற்சி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் தனது முகநூலில் வெளியிட்ட பதிவில் கூறினார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தண்ணீரால் பரவும் நோய்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும், சுகாதாரத்தை பராமரிக்கவும், தங்கள் குடியிருப்பு மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்கவும் அவர் அறிவுறுத்தினார்.
கோத்தா திங்கியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளினிக் டேசா செமங்கர், கிளினிக் டேசா பத்து 4 மற்றும் பெட்ரி ஜெயா ஆகிய மூன்று கிளினிக்குகள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன என்று லிங் மேலும் கூறினார்.



















