சகிப்புத் தன்மை குறைந்துவிட்டது; பாடகி சித்ராவுக்கு ஆதரவாக குஷ்பு!

ராம நாமம் பாடுங்கள் என்று சொன்னதற்காக பின்னணிப் பாடகி சித்ராவுக்கு எதிராக வலுப்பு எழுந்தது. இந்த விஷயத்தில் நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு சித்ராவுக்கு ஆதரவாக இப்போது கருத்துத் தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா ஜனவரி 22-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், நடிகர்கள், மடாதிபதிகள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, ராமரின் துதிகளைப் பாடவும், வீடுகளில் விளக்கு ஏற்றவும், வீடியோவில் ஒன்றில் தோன்றி வேண்டுகோள் வைத்தார் பாடகி சித்ரா.

இன்ஸ்டா ஸ்டோரியாக வெளியான இந்த வீடியோ வைரலானதில், கேரளாவை மையமாகக் கொண்டு இதற்கு சமூக ஊடகங்ளில் கடும் எதிர்ப்பு உருவானது. இது பெரும் சர்ச்சையாகி சைபர் வெளித் தாக்குதலுக்கு ஆளானார் சித்ரா.
சித்ராவுக்கு ஆதரவு, எதிர்ப்பு என இணைய வெளியே ரெண்டுபட்டது.

’அயோத்தியின் வரலாற்றையும், பாபர் மசூதி இடிக்கப்பட்டதையும் வசதியாக மறந்துவிட்டவரின் கோரிக்கை இது’ என்று சித்ராவுக்கு எதிராக பொதுவெளி தாக்குதல்கள் கிளம்பின.

இடதுசாரிகள் ஆட்சி நடக்கும் கேரளம் என்பதால், சித்ராவுக்கு எதிரான சீற்றம் வலுவாக ஒலித்தது.

ஒருவழியாக எல்லாம் ஓய்ந்த நிலையில் இந்த விஷயத்தில் சித்ராவுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார் நடிகை குஷ்பு. இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‘கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் ஆளும் தேசங்களில் சகிப்புத் தன்மை குறைந்து விட்டது. ஒருவரின் நம்பிக்கைக்கு மதிப்பளித்து அதை ஏற்றுக் கொள்ளும் தன்மையும் போய்விட்டது. சித்ரா பேசியது அவரின் உரிமை. அவருக்கு நான் ஆதரவு கொடுக்கிறேன்’ என ட்வீட் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here