கோலாலம்பூர்:
கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள பொழுதுபோக்கு மையங்களின் வாடிக்கையாளர்களை குறிவைத்து, போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட கும்பலின் செயற்பாடு காவல்துறையினரால் முறியடிக்கப்பட்டது.
கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து செயல்பட்டுவந்ததாக நம்பப்படும் இந்தக்கும்பல், பானங்களுடன் ஐந்து வகையான போதைமருந்துகளை கலந்து, ஒரு போத்தலுக்கு RM180 ரிங்கிட் முதல் RM300 வரையிலான விலைக்கு விற்றது தெரிய வந்துள்ளது.

கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 19 முதல் 40 வயதுக்குட்பட்ட ஐந்து ஆண்களையும் ஒரு பெண்ணையும் கைது செய்ய முடிந்ததாக, புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் (JSJN) இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் கமாருடின் முகமட் டின் கூறினார்.
இந்த நடவடிக்கையில், சந்தேகத்திற்குரிய போதைப்பொருள் சாறு என நம்பப்படும் 54,550 மில்லிலிட்டர் சாறுகள், 1.68 கிலோகிராம் MDMA பவுடர், 144 கிராம் கெட்டமைன், ஐந்து கிலோ எக்ஸ்டஸி பவுடர் என் மொத்தம் RM448,850 மதிப்புள்ள பல்வேறு போதைப்பொருட்களை போலீசார் கைப்பற்றினர்.

“ஆடம்பர குடியிருப்புகளை போதைப்பொருட்களை பதப்படுத்துவதற்கும் சேமிப்பதற்குமுரிய ஒரு இடமாக இந்தக் கும்பல் பயன்படுத்தியது” கண்டறியப்பட்டது என்று, இன்று வெள்ளிக்கிழமை செராஸ் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் (IPD) நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.





















