ரிஷி சுனக் ராஜினாமா கோரும் சொந்தக் கட்சியினர்!

பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் தொடர, அவரது சொந்தக் கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்து, கலகக் குரல் எழுப்பி வருகின்றனர்.

பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்றது முதலே நித்ய கண்டம் பூரண ஆயுசு கதையாக பதவியில் நீடித்து வருகிறார். இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதால், பிரிட்டன் வாழ் இந்தியர்கள் மட்டுமன்றி இந்திய குடிமக்கள் மத்தியிலும் ரிஷி சுனக் மீது தீரா அபிமானம் உண்டு. இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் மகள் அக்‌ஷதா மூர்த்தியை மணந்த வகையிலும் ரிஷி சுனக் மீது இந்தியர்களின் பிரியம் அதிகரித்துள்ளது. ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராளுக்கு நெருக்கமானவராக மாறியிருக்கிறார். இந்த ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராக நீடிக்க வாய்ப்பின்றி, சொந்தக்கட்சியினரின் அதிருப்தியால் தற்போது தடுமாறி வருகிறார்.

பிரதமர் ரிஷி சுனக் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாவிடில் வரும் தேர்தலில் அவரது கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வி அடையும் என்றும் சொந்தக் கட்சியினரே புலம்ப ஆரம்பித்துள்ளனர். போரிஸ் ஜான்சன், லிஸ் ட்ரஸ் வரிசையில் கட்சின் ஒரே ஆட்சிக்காலத்தில் மூன்றாவது பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்றார். பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே அதிகரித்த அதிருப்திகள், 15வது மாதத்தில் தற்போது உச்சம் தொட்டிருக்கின்றன.

ரிஷி சுனக்கிற்கு எதிரான அதிருப்திகளில் ஒன்றாக சட்டவிரோத குடியேறிகளை கையாள்வதில் நீடிக்கிறது. கன்சர்வேடிவ் கட்சியினரின் முதன்மையான அழுத்தம், புலம்பெயர்ந்தோரை வலுக்கட்டாயமாக நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்பதில் உள்ளது. பதவியில் நீடிப்பதற்காக அந்த நெருக்கடிகளுக்கு ரிஷி சுனக் ஆட்படுவதாக எதிர்க்கட்சியின் தாக்குதலுக்கு அவர் ஆளாகி வருகிறார். சட்ட விரோத குடியேறிகளை ருவாண்டாவுக்கு நாடு கடத்துவது என்ற புதிய திட்டத்தில் இழுபறி நீடிக்கிறது. ருவாண்டா பாதுகாப்பான நாடு அல்ல என்ற குற்றச்சாட்டுகள் ரிஷிக்கு எதிராக உள்ளன.

கன்சர்வேட்டிவ் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சர் சைமன் கிளர்க் என்பவர், ரிஷி சுனக் ராஜினாமா செய்யாவிடில் எதிர் வரும் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வி அடையும் என்று கலகக்குரல் எழுப்பி வருகிறார். முறையான தேர்தல் அடுத்தாண்டு ஜனவரியில்தான் வருகிறது. ஆனால் நெருக்கடிகள் சூழ்ந்திருப்பதால், அதற்கு சில மாதங்கள் முன்னதாகவே, நடப்பாண்டின் இரண்டாம் பாதியில் தேர்தலை அறிவித்து, அதிருப்தியை தணிக்க ரிஷி சுனக் திட்டமிட்டு வருகிறார்.

ஆனபோதும் எதிர்வரும் தேர்தலை சந்திக்க வேறு பிரதமர் அவசியம் என சைமன் கிளர்க் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர். தேர்தலுக்கு முன்னரே கன்சர்வேடிவ் கட்சி நான்கவது பிரதமரை எதிர்கொள்ளுமா, அல்லது சலசலப்புகளை வாயடைக்கச் செய்து திடமாக ரிஷி சுனக் தேர்தலுக்குத் தயாராவாரா என்பது அடுத்த சில வாரங்களில் தெரிந்துவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here