ஷா ஆலாம்:
ஷா ஆலாம் மருத்துவமனையின் பின்புற கதவு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது தாயின் காரில், மயங்கிய நிலையில் காணப்பட்ட ஐந்து வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று இரவு 8.01 மணியளவில் மருத்துவமனை அதிகாரியிடமிருந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு அறிக்கை கிடைத்தது என்று, ஷா ஆலாம் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் முகமட் இக்பால் இப்ராஹிம் கூறினார்.
ஆரம்பகட்ட விசாரணையின் விளைவாக, நேற்று பிற்பகல் 2 மணியளவில், அருகிலுள்ள பாலர் பள்ளியில் இருந்து தனது 5 வயது மகளை அழைத்துவந்த அவரது தாயார், தற்செயலாக பெரோடுவா ஆக்சியா காரில் மகளை விட்டுச் சென்றது கண்டறியப்பட்டது.
“மருத்துவமனை ஊழியரான 34 வயதான தாய், தனது மகள் தூங்கிக்கொண்டிருந்ததால், கார் என்ஜினை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றுவிட்டாதாகவும், அவரது கணவர் மாலை 6 மணிக்கு அவரைத் தொடர்பு கொண்ட பிறகுதான் இந்த சம்பவம் அவருக்கு நினைவுக்கு வந்தது” என்றும் அவர் கூறினார்.
” பின்னர், மயக்கமடைந்த சிறுமி ஷா ஆலம் மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார், ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவ அதிகாரிகள் உறுதிசெய்தனர் ,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 31(1)(a) இன் படி விசாரணை நடத்தப்பட்டதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால், RM50,000 அபராதம் விதிக்கப்படலாம் அல்லது 20 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று முகமட் இக்பால் கூறினார்.
“பள்ளியிலிருந்து அல்லது தினசரி பராமரிப்பு நிலையங்களிலிருந்து தங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது, பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள், குறிப்பாக இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் இருப்பதை அனைவரும் கருத்தில்கொள்ள வேண்டும்” என்று அவர் சொன்னார்.
“இந்த வழக்கு தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால், இன்ஸ்பெக்டர் சையர் எய்டிட் 013-6544996 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,” என்று அவர் மேலும் கூறினார்.




















