மாலத்தீவில் பயங்கரம்.. பட்டப்பகலில் அரசு தலைமை வழக்கறிஞர் மீது தாக்குதல்

மாலே: இந்தியாவுடன், மாலத்தீவு மோதலை கடைப்பிடித்து வருகிறது. இந்த விவகாரம் மாலத்தீவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ள நிலையில் அந்நாட்டின் அரசு வழக்கறிஞரான ஹுசைன் ஷமீம் சுத்தியலால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நம் நாட்டின் அண்டை நாடாக தீவுத்தேசமான மாலத்தீவு உள்ளது. இந்த நாடு அளவில் மிகவும் சிறியது. மாலத்தீவு அதிபராக எம்டிபி கட்சியின் இப்ராஹிம் முகமது சோலி இருந்தார். இவர் இந்தியாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தான் கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் இப்ராஹிம் முகமது சோலி தோல்வியடைந்தார்.

இந்த தேர்தலில் பிஎன்பி கட்சியை சேர்ந்த முகமது முய்ஸு வெற்றி பெற்று அதிபர். இவர் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர். மாறாக சீனாவுடன் நெருக்கம் காட்டி வருபவர். இதனால் முகமது முய்ஸு வெற்றியை தொடர்ந்து இந்தியா-மாலத்தீவு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட தொடங்கியது.

மேலும் பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் மற்றும் அவர் வெளியிட்ட போட்டோ மற்றும் வீடியோ என்பது மாலத்தீவை கோபப்படுத்தியது. மாலத்தீவின் சுற்றுலா துறையை முடக்கும் வகையில் உள்நோக்கத்துடன் லட்சத்தீவை பிரதமர் மோடி புரோமோட் செய்வதாக அந்நாட்டு அமைச்சர்கள், எம்பிக்கள் கூறியதோடு இந்தியா குறித்து சர்ச்சை கருத்துகளை தெரிவித்தனர். இது இந்தியா-மாலத்தீவு இடையேயான பிரச்சனையை இன்னும் அதிகப்படுத்தியது.

மாலத்தீவு செல்வதற்கான டிக்கெட்டுகளை இந்தியர்கள் ரத்து செய்தனர். இதனால் பயந்துபோன மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு 3 அமைச்சர்களை சஸ்பெண்டும் செய்தார். இதற்கிடையே இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை அதிபர் முகமது முய்ஸு தொடர்ந்து தெரிவித்து வருகிறார். இந்நிலையில் முகமது முய்ஸு ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன.

மேலும் சில நாட்களுக்கு முன்பு அந்நாட்டு நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் அதிபர் முகம்மது முய்ஸுவின் கட்சி எம்பிக்கள் மற்றும் முன்னாள் அதிபர் இப்ராஹிம் முகமது சோலியின் எம்டிபி கட்சி எம்பிக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. எம்பிக்கள் நடாளுமன்றத்திலேயே சண்டையிட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தகைய சூழலில் தான் தற்போது மாலத்தீவு அரசின் அரசு வழக்கறிஞர் ஹுசைன் ஷமீம் சுத்தியலால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது ஹுசைன் ஷமீம் முன்னாள் அதிபர் இப்ராஹிம் முகமது சோலியால் அரசு வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டார். இவர் இன்று காலையில் தலைநகர் மாலேவில் பணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த நபர் சுத்தியலால் அவரை கொடூரமாக தாக்கி உள்ளார். இதில் கையில் காயமடைந்த ஹுசைன் ஷமீம் உடனடியாக ஏடிகே மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவமனையில் அவர் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கேட்டபோது, ‛‛அரசு வழக்கறிஞர் ஹுசைன் ஷமீம் சாலையில் சென்றபோது தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார். அவர் மருத்துவ சிகிச்சையில் உள்ளார். இந்த தாக்குதல் என்பது கூரிய ஆயுதத்தால் நடத்தப்படவில்லை” என தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலின் பின்னணி பற்றி கேட்டதற்கு, ‛‛ஹுசைன் ஷமீம் ஆஜரான வழக்கில் தொடர்புடையவர்களால் இந்த சம்பவம் நிகழ்த்தப்பட்டு இருக்கலாம்” என தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே தற்போது தாக்குதலுக்கு உள்ளான வழக்கறிஞர் ஹுசைன் ஷமீம் முந்தைய அதிபர் இப்ராஹிம் முகமது சோலி-யால் நியமனம் செய்யப்பட்டவர். தற்போது இப்ராஹிம் முகமது சோலியின் கட்சிக்கும், அதிபர் முகமது முய்ஸுவின் கட்சிக்கும் இடையே கடும் மோதல் இருந்து வரும் நிலையில் இந்த தாக்குதல் நடந்து இருப்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சம்பவம் என்பது மாலத்தீவில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்பதற்கு உதாரணமாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்ட தொடங்கி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here