சமூக வலைதளங்களால் நாசமான குழந்தைகளின் வாழ்க்கை; பெற்றோரிடம் மன்னிப்பு கேட்ட மார்க்

சமூக வலைதளங்களில் குழந்தைகள் பாதுகாப்பிற்கான வசதிகள் தொடர்பான அமெரிக்க செனட் சபையின் விசாரணையின்போது மேத்தா நிறுவனர் மார்க் ஸுகர்பெர்க் எழுந்து நின்று அங்கிருந்த பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் நிறைந்துள்ள இந்த காலத்தில் வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக ஊடகங்கள் அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலானோர் இந்த சமூக வலைதளங்களில் பலநேரம் செலவழிக்கின்றனர். குறிப்பாக, குழந்தைகள் இதற்கு அடிமையாகி விடுகின்றனர். இதனால், பாலியல் துன்புறுத்தல், மோசடி போன்ற பல பிரச்சினைகள் உலகம் முழுவதும் எழுகின்றன.

கடந்த ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக மேத்தா உள்ளிட்ட முன்னணி சமூக வலைதள நிறுவனங்கள் மீது பல்வேறு மாகாணங்கள் வழக்குகள் பதிவானது. இந்த நிலையில், அமெரிக்க செனட் சபையில் நேற்று குழந்தைகள் பாதுகாப்பு சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில், மெட்டா, டிக்டாக், எக்ஸ், ஸ்னாப்சாட் உள்ளிட்ட பல்வேறு வலைதள நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சமூக வலைதளங்களில் போதுமான பாதுகாப்பு கட்டுப்பாடுகள் இல்லாததால் குழந்தைகள் மற்றும் பதின்பருவத்தினர் இணைய மிரட்டல்களுக்கும், பாலியல் தொல்லைகளுக்கும், தற்கொலைகளுக்கும் கூட ஆளாகின்றனர் என அமெரிக்க செனட் அமைப்பினர் குற்றம் சாட்டினர்.

சமூக வலைதளங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள், பாதிக்கப்பட்ட தங்கள் குழந்தைகளின் புகைப்படங்களை கையில் ஏந்தியவாறு செனட் சபையில் இருந்தனர். இந்த வலைதளங்கள் தங்களது லாபங்களில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும், குழந்தைகளின் பாதுகாப்பிற்கு போதுமான வசதிகளை மேம்படுத்தவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

இதனை தொடர்ந்து, அமெரிக்க செனட் நீதித்துறை குழு உறுப்பினர் ஜோஷ் ஹாவ்லி, மார்க் ஸுகர்பெர்க்கை நோக்கி, “உங்கள் வலைதள உள்ளடக்கங்களால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்பீர்களா?” என்று கேட்டார். இதனை அடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களை நோக்கி திரும்பிய அந்நிறுவனத்தின் மார்க் ஜுக்கர்பெர்க், தனது நிறுவனத்தின் தவறுக்காக மன்னிப்பு கேட்டார்.

அவர்களிடம் பேசிய மார்க், “நீங்கள் அனைவரும் அனுபவித்த கொடுமையான துன்பங்களுக்கு நான் வருந்துகிறேன். உங்கள் குடும்பங்கள் அனுபவித்த துயரங்கள் வேறு எவருக்கும் வரக் கூடாது. என்னை மன்னியுங்கள். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க மேத்தா உறுதி பூண்டுள்ளது’ என்று உறுதியளித்தார்.

மேலும், 16 வயதிற்குட்பட்டவர்களுக்கு அந்நியர்கள் யாரும் குறுஞ்செய்தி அனுப்ப முடியாதபடி புதிய வழிமுறைகளைக் கொண்டுவருவதாக மார்க் உறுதியளித்தார். வன்முறையைத் தூண்டும் பதிவுகள், தற்கொலை தொடர்பான பதிவுகளை அவர்கள் பார்வையிலிருந்து நீக்க முயற்சிப்பதாக அவர் கூறினார். ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி உறுப்பினர்களால் சுமார் 4 மணி நேரங்களுக்கு மேலாக இந்த விசாரணை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here