தாப்பா:
பீடோர் தற்காலிக குடியேற்ற தடுப்பு மையத்தில் இருந்து கடந்த வியாழக்கிழமை இரவு தப்பிச் சென்றவர்களில், இன்று காலை வரை மொத்தம் 10 சட்டவிரோத குடியேற்ற கைதிகள் மீண்டும் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
மீதமுள்ள 120 கைதிகளைக் கண்டறியும் நடவடிக்கை, அவர்கள் அனைவரும் கைது செய்யப்படும் வரை தொடர்ந்து நடைபெற்று வருவதாக குடிநுழைவுத் துறை இயக்குநர் ஜெனரல் டத்தோ ரஸ்லின் ஜூசன் தெரிவித்தார்.
“இன்று காலை 7 மணியளவில், இரண்டு நபர்கள் பத்து மெலிந்தாங் மசூதியில் தடுத்து வைக்கப்பட்டனர், அங்கு அவர்கள் தண்ணீர் குடிக்க வந்தனர். அப்போது உள்ளூர்வாசிகள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர், பின்னர் அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.
“சிறிது நேரத்திற்கு முன்பு, செமெண்டா ஓராங் அஸ்லி கிராமத்தில் 12 கிலோமீட்டர் சுற்றளவில் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. குறித்த கைதிகள் தற்போது உணவு தேடி வெளியே வரத் தொடங்கியுள்ளனர்,” என்று அவர் இங்கு நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
பொது நடவடிக்கைப் படை, விமானப் படை, குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் மக்கள் தன்னார்வப் படை (ரேலா) உள்ளிட்டவரிகளுடன் காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.








