மேட்டூர் அணை இன்று திறப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி

டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்களைக் காத்திட மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விட வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்பட்டு, இன்று முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் தற்போது கதிர் வரும் நிலையில் உள்ளன. அவற்றிற்கு தற்போது நீர் அத்தியாவசியமான ஒன்றாகும். மழையும் குறைந்து போய், ஆற்றிலும் நீர் இல்லாததால் சம்பா பயிர்கள் நீரின்றி காய்கின்றன. இதனால் தங்களுக்கு மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதை வலியுறுத்தி விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் திருச்சி, தஞ்சை உள்ளிட்ட இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. நீர் திறக்க வேண்டும் என்று தொடர்ந்து விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து இன்றுமுதல் இரண்டு டிஎம்சி தண்ணீர் திறந்து விட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Tamil Nadu CM M K Stalin to open Mettur Dam ahead of schedule

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “நடப்பு ஆண்டில் வடகிழக்குப் பருவ மழைப்பொழிவு குறைவாகப் பெய்த காரணத்தாலும், காவிரி நதிநீர்ப் பற்றாக்குறையாலும், டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடக் கோரி விவசாயப் பெருமக்களிடமிருந்து கோரிக்கை கிடைக்கப் பெற்றது.

அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் சம்பா நெற்பயிரின் நிலையினை அறிந்திட தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில், கிராம அளவில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு, 298 கிராமங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த குழுக்களின் அறிக்கையின் அடிப்படையில், திருவாரூர் மாவட்டத்தில் 4,715 ஏக்கரும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 18,059 ஏக்கரும் என மொத்தம் 22,774 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் பாசன நீர்ப்பற்றாக்குறையால் பாதிக்கப்படும் என அறியப்பட்டுள்ளது.

எனவே, விவசாயப் பெருமக்களின் நலன் கருதி நெற்பயிரினைக் காத்திட, மேட்டூர் அணையிலிருந்து இரண்டு டிஎம்சி தண்ணீரை பிப்.3-ம் தேதி முதல் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். எனவே, விவசாயப் பெருமக்கள் இப்பாசன நீரினை சிக்கனமாகப் பயன்படுத்தி சம்பா நெற்பயிரைப் பாதுகாத்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here