பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதாக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று அறிவித்துள்ளார். அத்துடன் கூட்டணி அரசு அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்றது. பாகிஸ்தானில் 336 தொகுதிகளில் உள்ளன. இதில் 60 இடங்கள் பெண்களுக்காகவும், 10 இடங்கள் சிறுபான்மை மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 266 தொகுதிகளுக்கும் நேரடியாக மக்கள் மூலம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஒருதொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் உயிரிழந்த நிலையில் அந்த தொகுதிக்கு மட்டும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு எஞ்சிய 265 தொகுதிகளுக்கும் நேற்று தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி, பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஊழல் வழக்கில் சிறையில் உள்ளார். இந்த நிலையில் அவரது கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது.
இதனால், இம்ரான்கானின் ஆதரவாளர்கள் சுயேட்சையாக போட்டியிட்டுள்ளனர். இதனிடையே, தேர்தலில் பதிவான எண்ணப்பட்டுவந்த நிலையில் தகவல் தொடர்பு முடக்கம் காரணமாக தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக தேர்தல் ஆணைய தெரிவித்தது.
இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றுள்ளோம். இந்த தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது. கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறினார்.
அவர் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றார் என்ற விவரத்தை தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், தேர்தல் ஆணைய அதிகாரிகளால் வெளியிடப்பட்ட அறிக்கையில், நவாஷ் ஷெரீப் கட்சி 42 இடங்களை வென்றுள்ளதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.