சிவபெருமான் பஞ்ச பூதங்களாக உள்ள தலங்களும் அதன் சிறப்புகளும்!!

பஞ்ச பூத தலங்கள் தென்னிந்தியவில் மட்டுமே காணப்படுகின்றன. அதில் ஒன்று மட்டும் ஆந்திராவிலும் மற்ற நான்கு தலங்கள் தமிழ்நாட்டிலும் காணப்படுகின்றன. சிவபெருமானே பஞ்ச பூதங்களாகவும் உள்ள தலங்கள் இவை:

1,காற்று- ஸ்ரீ காளஹஸ்தி -ஆந்திரா

ஆந்திர மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற தலங்களில் ஒன்று ஸ்ரீ காளஹஸ்தி. சிவபெருமானின் பஞ்ச பூத தலங்களில் இது வாயுத் தலமாக போற்றப்படுகிறது. சிவபெருமான் காற்றாக எழுந்தருளியிருக்கும் தலம். இங்கு வழிபட்டால் ராகு-கேது தோஷம் உள்பட சகல தோஷமும் விலகும். காளத்தி நாதரான சிவலிங்கத்திற்கு கண்ணப்ப நாயனார் கண் தானம் செய்த இடமும், அவர் முக்தியடைந்த இடமும் இதுவே. இங்குள்ள கருவறையில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் தீபம் காற்றால் அசைவதைப் போலவே அசைந்துக் கொண்டிருக்கும். காற்றே இல்லாத கருவறையில் காற்று வீசுவதைப் போல தீபம் எந்நேரமும் அசைவது அதிசயமே. காட்டு வேடரான திண்ணன்

( கண்ணப்ப நாயனாரின் இயற்பெயர்) முதல் வேட்டைக்குப் போகும் பொழுது காட்டுப்பன்றியைத் துரத்திக்கொண்டு, ஓடிய மலை கோயிலின் அருகிலேயே உள்ளது. காட்டுப்பன்றியைத் துரத்திய திண்ணன், சிவலிங்கத்தைக் கண்டு ஈர்க்கப்பட்ட இடம் இம் மலையே.

2,நிலம்-ஏகாம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம் –தமிழ்நாடு.

இங்குள்ள சிவபெருமானை வணங்கினால் முக்தி கிடைக்கும்.
சிவலிங்கத்தின் மீது தைமாதம் இரதசப்தமி தினத்தில் சூரிய ஒளி விழும். இந்த கோயிலின் அருகேயுள்ள மாமரம் 5000- ஆண்டு பழமையானது ஆகும். இங்கு சிவலிங்கத்தை, அம்மனே மணலால் பிடித்து வைத்து வழிபட்டார். அப்பொழுது கம்பா நதி பெருக்கெடுத்து வர தண்ணிரிலிருந்து சிவலிங்கத்தை பாதுகாக்க அம்பாள் கட்டியணைத்தார். அதன் அடையாளம் இன்றும் சிவலிங்கத்தில் உள்ளது. இதனால் சிவபெருமான் தழுவக் குழைந்த நாதர் எனப் பெயர் பெற்றார்; அம்மன் ஏலவார் குழலி அம்மன்.

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று. மாமரமே இங்கு தல விருட்சம். அம்பிகைச் சிவனாரை மணந்தக் கோலத்தில் முகத்தில் நாணத்துடன் காட்சியளிப்பது தெய்விகமான,அருமையான காட்சி. சிவனாரைச் சாட்சியாக வைத்து வாக்குக் கொடுத்தச் சுந்தரர், அதை மீறியதால் இரு கண்களிலும் பார்வையை இழந்தார். பின்னர் இத்தலத்தில் வந்து சிவனாரை வழிபட்டு இடக்கண் பார்வையைப் பெற்றார்.

3,நீர்-திருவானைக்காவல் ஜம்புகேஷ்வரர் திருக்கோயில்- திருச்சி

ஜம்பு என்றால் நாவல் மரம். முற்காலத்தில் நாவல் காடாக இருந்த இடமிது. இங்குள்ள சிவலிங்கமானது தரைமட்டத்திற்கு கீழே இருக்கும். இங்கு தண்ணீராக சிவபெருமான், இருப்பதால் எப்பொழுதும் கருவறையில் தண்ணீர் ஊறிக்கொண்டே இருக்கும். சிவலிங்கமே தண்ணீரில் மூழ்கிவிடுமளவு நீர் சுரப்பதுண்டு. அவ்வப்போது தண்ணீர் இறைக்கும் பம்புகள் மூலம் நீரை இறைத்து கோயிலுள் இருக்கும் ஒரு கிணற்றில் விட்டு விட்டே பூசாரிகள் பூஜைகளைச் செய்வர்.

நாவல் மரத்தடியில் இருந்த சிவலிங்கத்தைக் காக்க ஒரு சிலந்தி வலையமைக்க, யானையொன்று அதைச் சுத்தப்படுத்தி வழிபட்டு வந்தது. இதனால் கோபமான சிலந்தி யானையின் துதிக்கையினுள் நுழைந்து கடித்துவிட இரண்டும் இறந்தன. சிவபெருமான் யானைக்கு முக்தியையும், சிலந்திக்கு மறுபிறப்பில் சோழவம்சத்தில் பிறந்து, நிறைய சிவாலயங்களைக் கட்டும் பாக்கியத்தையும் அளித்தார். அவரே யானை ஏறாத மாடக் கோயில்களாகக் காவிரியோரமாக 96 சிவாலயங்களைக் கட்டிய சோழன் கோச்செங்கணான்.

4.நெருப்பு-அண்ணாமலையார் திருக்கோயில் -திருவண்ணாமலை.

பிரம்மாவிற்கும், திருமாலுக்கும் அடிமுடி தெரியாதவாறு அக்னிப் பிழம்பாகச் சிவபெருமான் நின்ற தலம் இது. அந்த அக்னியே குளிர்ந்து மலையானது என்பர். எனவே திருவண்ணாமலையையே சிவபெருமானாக வழிபடுவர். இதற்கேற்ப ஆராய்ச்சியாளர்களும் இம்மலை முற்காலத்தில் எரிமலையாக இருந்தது குளிர்ந்ததே! என்கின்றனர்.

இந்த கோயிலை கட்டி முடிக்க ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளது, இந்த தகவல் கோயில் கல்வெட்டுகளிலும் உள்ளது. இங்குள்ள கல்வெட்டுகளில் தமிழ், சமஸ்கிருதம், கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் உள்ளது.
இங்கு பங்குனி உத்திரம் நாளில் இரண்டு முறை திருக்கல்யாணம் நடக்கும். முதலில் மூலவரான அண்ணாமலையாருக்கும், அதன்பின் உற்சவரான பெரிய நாயகருக்கும் நடக்கும் இந்நிகழ்வு திருவண்ணாமலை கோயிலில் மட்டுமே நடக்கும் வைபவமாகும்.

5,ஆகாயம்-ஶ்ரீநடராஜர் திருக்கோயில் -சிதம்பரம்.

தில்லை என முற்காலத்தில் வழங்கப்பட்ட இத்தலம் சிவபெருமான் ஆகாயமாக இருக்கும் தலம். பதஞ்சலி, வியாக்ரபாதர் ஏன்ற இரு முனிவர்களுக்கும் சிவபெருமான் அருளிய இடம். இங்குள்ள தல விருட்சம் தில்லை மரம். இங்குள்ள கோயிலும், மனித உடலின் அமைப்பும் ஒன்றாக கருதப்படுகிறது. சிதம்பரத்தைப் பொன்னம்பலம் என்பர். சிதம்பர ரகசியம் என்ற இரகசியம் இங்கு வெகு பிரசித்தம்.

சித்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ளது ஒரு சிறிய வாயில், அங்குள்ள திரை அகற்றபட்டு தீபாராதனை காட்டபடும். அங்கு திருவுருவம் இல்லாது, தங்கத்தால் ஆன வில்வ தளமாலை ஒன்று தொங்கவிடபட்டிருக்கும். இங்கு இறைவன் ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதே! சிதம்பர ரகசியம் எனப்படுகிறது. ஆகாயத்துக்கு ஆரம்பமும் ,முடிவும் கிடையாது , அதை உணரத்தான் முடியும் என்பதை இதை உணர்த்துவதாகும்.

ஆடலரசன் என்று அழைக்கப்படும் நடராஜர் ஒரே இடத்தில் இல்லாமல் ஆடிக்கொண்டே இருக்கிறார். வலது புற மேல் கையில் உடுக்கையை கொண்டிருப்பது இந்த உலகம் ஒலியின் மூலம் துவங்கியது என்பதைக் குறிப்பதாக நம்பப்படுகிறது. இன்றைய அறிவியல் அறிஞர்கள் இதை தான் பெரு வெடிப்புக் கொள்கை (BIG BANG THEORY) என்று அழைக்கின்றனர். இடது புற மேல் கையில் உள்ள நெருப்பு எந்நேரமும் அழித்து விடுவேன்! என்ற எச்சரிக்கையை கொடுக்கின்றது. வலது புற கீழ் கையில் காப்பாற்றுவதை குறிப்பதை போன்று, பயப்படாதே நான் இருக்கிறேன்! என்பதைக் காட்டுகிறது. இடது புற கீழ் கையால், உயர்த்தி இருக்கும் காலைக் காட்டி, தன்னை வணக்கும் பக்தர்களுக்கு ஆபயமளிக்கும் இடம் இது என உணர்த்துகிறது. இந்த நடனத்தில் ஆக்கல், அழித்தல், காத்தல் என்ற அணுவின் இயற்பியல் விதியின் அனைத்து செயல்களோடும் ஒத்துப்போகின்றது.

“கர்மாவே பெரிது, கடவுள் இல்லை” என்று கூறிய முனிவர்களின் அறியாமையை நீக்கிட வந்த ஈசன் தனக்கு எதிராக ஏவப்பட்ட யானையை தன் ஆடையாக்கி, உடுக்கு, தீ, பாம்பு முதலியவற்றை ஆபரணமாகக் கொண்டு நடராஜராக ஆருத்ரா தரிசன காட்சி தந்த நாள்தான் மார்கழித் திருவாதிரை. அன்று தான் தில்லையில் நடராஜர் வியாகரபாத முனிவருக்கு நடராஜராகத் தரிசனம் தந்தார்.

ஆருத்ரா என்பது, திருவாதிரை நட்சத்திரத்தை குறிக்கும். மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில், நடராஜரின் திருநடனம் கண்டால், பிறவிப்பிணித் தீரும். அவர் இடது காலை, தூக்கி ஆடல் அரசனாகக் காட்சித்தரும் கோலம் அனைவரையும் மயக்கும். அவரது கால் விரலின் கீழே தான் உலகின் மொத்த காந்தப் புலத்தின் மையப்புள்ளி உள்ளதாம். எண்ணற்ற அதிசயங்கள் கொண்ட தலமிது. நந்தனார் என்ற திருநாளைப்போவார் இறைவனோடு கலந்த தலம் இது. சைவக் குரவர்கள் நால்வராலும் பாடப் பெற்ற பூலோகக் கைலாயம் இது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here