உலகின் முதல் மீத்தேன் எரிபொருள் ராக்கெட்டை ஏவியது சீனா

சீனாவைச் சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான லேண்ட்ஸ்பேஸ், உலகின் முதல் மீத்தேன்- திரவ ஆக்சிஜன் மூலம் இயங்கும் விண்வெளி ராக்கெட்டை வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் செலுத்தியுள்ளது.

ஜுக்-2 கேரியர் என்ற இந்த ராக்கெட், வடமேற்கு சீனாவின் தன்னாட்சி பிராந்தியமான மங்கோலியாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து இன்று உள்ளூர் நேரப்படி காலை 09:00 மணிக்கு வானில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டிருக்கிறது.

இந்த வெற்றியின் மூலம் இந்நிறுவனம், குறைந்தளவே மாசுபடுத்தும், பாதுகாப்பான, மலிவான மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய உந்துசக்தியை கொண்டு ஏவுகணை வாகனங்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவை முந்துகிறது.

இதன் மூலம், மீத்தேன் வாயுவை எரிபொருளாக கொண்டு செலுத்தப்படும் விண்வெளி வாகனங்களை உருவாக்கும் போட்டியில் அமெரிக்காவின் எலான் மஸ்கின் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் ஜெஃப் பெஜோஸின் நிறுவனமான புளூ ஆரிஜின் நிறுவனம் ஆகியவற்றை சீனா முந்தி விட்டது.

மேலும், திரவ உந்து ராக்கெட்டை விண்ணில் செலுத்திய இரண்டாவது தனியார் சீன நிறுவனம் என்ற பெருமையையும் லேண்ட்ஸ்பேஸ் பெற்றுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம், எரிபொருளை நிரப்பி மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டுகளை உருவாக்கும் தொழில்நுட்பத்தில் சீனாவின் பீஜிங் டியான்பிங் டெக்னாலஜி எனும் நிறுவனம் ஒரு மண்ணெண்ணெய்-ஆக்சிஜன் ராக்கெட்டை ஏவி வெற்றி கண்டது. 2014ல் விண்வெளி துறையில் தனியார் முதலீட்டை சீன அரசாங்கம் அனுமதித்ததிலிருந்து சீன வணிக விண்வெளி நிறுவனங்கள் இந்தத் துறையில் ஆர்வமாக செயல்பட்டு வருகின்றன.

லேண்ட்ஸ்பேஸ் கடந்த டிசம்பர் மாதம் ஜுக்-2 ராக்கெட்டை ஏவும் முயற்சியில் இறங்கி தோல்வி கண்டது. தற்போது இரண்டாவது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here