மணிலா:
பிலிப்பைன்சின் மின்டானாவ் மாநிலத்தில் இன்று (பிப்ரவரி 10) நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவில் 5.6ஆகப் பதிவானதாகவும், நிலத்துக்கு அடியில் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் ஜெர்மனியின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
ஆனால், நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9ஆகப் பதிவானதாகவும் நிலத்துக்கு அடியில் 27 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் பிலிப்பீன்ஸ் நிலநடுக்க ஆய்வு மையம் கூறியது.
நிலநடுக்கம் காரணமாக சேதம் ஏதும் ஏற்படாது என்று எதிர்பார்க்கப்படுவதாக பிலிப்பீன்ஸ் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்தது.
இருப்பினும், நிலநடுக்கத்துக்குப் பிறகு நில அதிர்வுகள் ஏற்படக்கூடும் என்று அது எச்சரிக்கை விடுத்தது.
நிலநடுக்கம் காரணமாக இதற்கு முன்பு, மாக்கோ நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் புதையுண்ட பலரைத் தேடும் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
முன்னதாக பிப்ரவரி 6ஆம் தேதியன்று தங்க சுரங்கத்துக்கு வெளியே நிலச்சரிவு நிகழ்ந்தது. இதில் மரண எண்ணிக்கை 28ஆக உயர்ந்துள்ளது. அத்தோடு 77 பேரைக் காணவில்லை, 32 பேர் காயமடைந்தனர்.
இடிபாடுகளுக்கு அடியில் கிட்டத்தட்ட 60 மணி நேரம் சிக்கித் தவித்த 3 வயது சிறுமி, பிப்ரவரி 9ஆம் தேதியன்று உயிருடன் மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.