பயிற்சியில்  முகமட் சாலா

ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையிலான கால்பந்துப் போட்டியில் எகிப்து அணியைப் பிரதிநிதித்து களமிறங்கியபோது ஏற்பட்ட தசை காயத்தின் காரணமாக ஓய்வில் இருந்த முகமட் சாலா மீண்டும் லிவர்புல் அணியுடன் பயிற்சியைத் தொடங்கியுள்ளார்.

31 வயதான சாலாவுக்கு கடந்த மாதம் நடைபெற்ற குழு ரீதியிலான ஆட்டத்தில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சிகிச்சைகாக திருப்பி அனுப்பப்பட்டார்.

ஒருவேளை அந்தப் போட்டியில் எகிப்து அணி இறுதி ஆட்டத்திற்குத் தகுதி பெற்றிருந்தால் அவர் அந்த ஆட்டத்தில் களம் இறக்கப்பட்டிருப்பார். ஆனால் 16 அணிகளுக்கு இடையிலான சுற்றிலேயே எகிப்து அணி தோல்வி கண்டு வெளியேறியது. இதனால் முகமட் சாலா காயம் குணமடையும் வரையில் ஓய்வில் இருந்து வந்தார்.

சனிக்கிழமை அன்று லிவர்புல் அணி இங்கிலாந்து பிரிமியர் லீக்  போட்டியில் பிரேன்ஃபோர்ட் அணியை எதிர்கொண்டு விளையாடவுள்ளது. இந்நிலையில் அந்த அணியின் பயிற்சியில் முகமட் சாலா நேற்று முன்தினம் கலந்து  கொண்டார். அவர் மிகவும் உற்சாகத்துடன் பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்கள் தற்போது வெளிவந்துள்ளன.

இதற்கு முன் லிவர்புல் அணியைப் பிரதிநிதித்து முகமட் சாலா புத்தாண்டு அன்று நியூகாசல் அணிக்கு எதிராக களம் இறங்கினார். அந்த ஆட்டத்தில் அவர் இரண்டு கோல்கள் புகுத்தியதோடு ஒரு கோல் புகுத்த உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here