ரெ. மாலினி
மலாக்கா:
2024 “மலாக்காவிற்கு வருகை ஆண்டு” எனும் மலாக்கா மாநில அரசாங்கத்தின் திட்டத்தை முன்னெடுத்து மலாக்கா சுற்றுலாத்துறை ஒத்துழைப்பில் பல்வேறு கலை அம்சங்கள் கொண்ட நிகழ்ச்சிகள் மலாக்கா மாநிலம் முழுவதும் அரங்கேற்றம் கண்டு வருகின்றன.
மலாக்காவில் பல இடங்கள் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதாக இருந்தாலும் அவர்கள் நாடிச் செல்லும் இடமாக மலாக்கா மத்திய நகரில் உள்ள ஜோங்கர் வார்க் ( Jongker walk) சாலை விளங்குகிறது.
மலாக்கா வரலாற்று மாநரில் டச்சு கட்டடங்கள் , சிவப்பு மணிக்கூண்டு எதிர்ப்புறம் தொன்மையான மலாக்கா பாலத்தைக் கடந்து வந்தால் ஜோங்கர் வார்க் சாலையைக் காணலாம்.
வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை சுமார் 1 கிமீ தூரம் ஜோங்கர் வார்க் சாலை வாகனங்களுக்கு மூடப்பட்டு, இருப்புறங்களிலும் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகக் கடைகளில் ஆயிரக்கணக்கில் மக்கள் திரள்வர்.
ஜோங்கர் வார்க் உணவுச் சந்தை

குறிப்பாக பண்டிகைக்கால விடுமுறை காலங்களில் ஒரு நாளைக்கு சுமார் 50,000 பேர் இங்கு வருகை புரிகின்றனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கப் பூமியாக விளங்கும் ஜோங்கர் வார்க்கில் விற்கப்படும் பல வகையான உணவுகளைச் சுவைப்பதற்கு மக்கள் கூட்டம் அலைமோதுவதைக் காணலாம். ஈக்கான் பாக்கார் இங்கு பிரபலம்.
இங்கு வருகை புரிபவர்கள் வெறுங்கையுடன் வீட்டிற்குச் செல்லும் சரித்திரமே இல்லையென்றே சொல்ல வேண்டும். பாபா ஞோஞாக்கள் வாழ்ந்த பழங்காலக் கட்டடங்களுக்கு இடையே நடைபெறும் ஜோங்கர் வால்க் உணவுத் திருவிழா இரவு வேளையில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும். இங்கு வருபவர்கள் இரவு உணவு, பானங்களைச் சுவைத்துக் கொண்டே அச்சாலையில் ஷோப்பிங் செய்யலாம்.
கைவினைப் பொருட்கள், துணிகள், பலவகைப் பொருட்கள், ஆபரணங்கள் உட்பட இங்கு விற்கப்படும் உணவு வகைகளைச் சுவை பார்ப்பதில் சுற்றுலாப் பயணிகளுக்கு அலாதிப் பிரியம்.
வரிசையில் மக்கள் பொறுமையாக கால் கடுக்க நின்று வாங்கிச் சாப்பிடுவதே ஓர் அழகுதான்.
இங்குள்ள பழங்காலக் கட்டடங்களில் சுற்றுப்பயணிகள் பல வகையான பொருட்களை வாங்கி மகிழ்வதோடு சுற்றித் திரிந்த களைப்பில் கால்களுக்கு மசாஜ் செய்து கொள்ளவும் மசாஜ் செண்டர்கள் இங்கு அதிகமாக உள்ளன. இதனைத் தவிர பட்ஜெட் ஹோட்டல்கள் இங்கு அதிகமாக உள்ளன.
மேலும் சுற்றுலாப் பயணிகள் இங்கேயே தங்கி, உணவுகளைச் சுவைத்து சுற்றுலா இடங்களை நடந்தே சென்று சுற்றிப் பார்த்து மகிழ்ச்சியாக தங்கள் விடுமுறையைக் கழிப்பதற்கு ஜோங்கர் வார்க் சிறந்ததொரு தேர்வாக அமைந்துள்ளது.

மலாக்காவாசிகளுக்கும் வெளி மாநில மக்களுக்கும் கூட ஜோங்கர் வார்க் உணவுச் சந்தை மக்களைப் பெரிதும் கவர்ந்த ஒரு சுற்றுலாத் தலமாக திகழ்வதோடு வாரந்தோறும் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுடன் ஒன்று கூடி மகிழும் சொர்க்கபுரியாகவும் விளங்குகிறது.




















