விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிக்க முயன்ற ஓட்டுநர் பொது மக்கள் தாக்கியதில் பலி

கோலாலம்பூர்:

விபத்து ஏற்படுத்திவிட்டு, தப்பித்துச் சென்றதாக நம்பப்படும் ஆடவர் ஒருவரை, பொதுமக்கள் துரத்திச் சென்று தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தாமான் பெலாங்கி செமினி 2 பகுதியில் நடந்த ஒரு பயங்கர விபத்து குறித்து, நேற்று இரவு சுமார் 9.20 மணி அளவில், காஜாங் மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு தகவல் கிடைத்தது என்று, காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர், துணை ஆணையர் முஹமட் ஜாஹிட் ஹாசன் கூறினார்.

முதற்கட்ட விசாரணையின் விளைவாக, சாம்பல் நிற புரோத்தோன் சாகா வகை கார் குடியிருப்பு பகுதியின் வேலியில் மோதியதாக நம்பப்படுகிறது. உடனே அந்த ஓட்டுநரை காருக்கு வெளியே இழுத்து பொதுமக்கள் அடித்ததில், அவர் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.

அப்போது சம்பவ இடத்திற்குச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனம், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கைகள் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததை உறுதி செய்தது.

குறித்த ஓட்டுநரை அடித்ததாக ஐந்து ஆடவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 22 முதல் 52 வயதுடையவர்களான ஐவரும் வரும் 25/02/2024 வரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

இவ்வழக்கு குற்றவியக் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது, மேலும் போக்குவரத்து பிரிவு சட்டம் 1987 இன் பிரிவு 41இன் கீழும் விசாரணை நடத்தப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் காஜாங் போலீஸ் தலமையகத்தையோ அல்லது 013-7854100 என்ற எண்ணில் ரெட்சுவான் பின் மாட் சாலேயை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என்று அவர் சொன்னார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here