எலான் மஸ்க் சரியான தலைவர் இல்லை: டுவிட்டர் நிறுவனர் ஜேக் டார்சி அதிரடி

டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையை நீண்ட இழுபறிக்கு பின்னர் ஒரு வழியாக கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபரில் எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார். அதன் உரிமையாளராக ஆனதும், நிறுவனத்தில் பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டார்.

பொதுவாக, நிறுவன வளர்ச்சிக்காக மாற்றங்கள் இருக்கும். அதற்கேற்ப பணியாளர்களும் செயல்படுவார்கள். ஆனால், மஸ்க் உரிமையாளரானதும், நிறுவனத்தில் பணியாளர்களையே மாற்றினார். முக்கிய பொறுப்பில் இருந்து சிலரை அதிரடியாக நீக்கினார்.

டுவிட்டரின் புளூ டிக் குறியீடு கிடைப்பதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என கூறி வாடிக்கையாளர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். டுவிட்டரின் நிறுவனர் ஜேக் டார்சி. இவருக்கும் எலான் மஸ்க்கிற்கும் இடையே நீண்டகால நட்பு பிணைப்பு உள்ளது. டுவிட்டரை, மஸ்க் விலைக்கு வாங்குவதற்கு முன்பு, அவருக்கே தனது முழு அளவிலான ஆதரவை டார்சி வெளியிட்டார்.

கடந்த 2022-ம் ஆண்டு டுவிட்டரில் டார்சி வெளியிட்ட செய்தியில், டுவிட்டரை யாரும் விலைக்கு வாங்கி சொந்தம் கொண்டாடவோ அல்லது அதனை நடத்தவோ வேண்டும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அது பொதுமக்களின் நலனுக்கான ஒன்றாக இருக்க வேண்டுமே தவிர, ஒரு நிறுவனம் ஆக இருக்க கூடாது என பதிவிட்டார்.

எனினும், ஒரு நிறுவனம் என்ற அளவில் அதன் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். அதற்கு எலான் மஸ்க்கே நான் நம்ப கூடிய தனிப்பட்ட தீர்வாக இருக்க முடியும். அவரது செயல் திட்டத்தில் எனக்கு நம்பிக்கை உள்ளது என்று டார்சி பதிவிட்டார். இந்த நிலையில், எலான் மஸ்க் பற்றிய தனது நிலைப்பாட்டை டார்சி மாற்றி உள்ளார். அவர் அப்படியே, தலைகீழாக மாறி, டுவிட்டரில் மஸ்க்கின் தலைமையை விமர்சித்து உள்ளார். டார்சிக்கு புளூ டிக் வழங்கப்பட்டு, அது சரிபார்க்கப்பட்டு விட்டது என டுவிட்டர் தெரிவித்து உள்ளது.

ஆனாலும், மஸ்க்கின் டுவிட்டர் தலைமைத்துவம் பற்றிய தனது பார்வையை பற்றி அதில் டார்சி எதுவும் வெளியிடவில்லை. அதற்கு பதிலாக, அவரது சொந்த புளூஸ்கை என்ற தளத்தில் டார்சி சில விசயங்களை பகிர்ந்து உள்ளார்.

இந்த தளம் குறிப்பிட்ட, தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளர்களுக்கு மட்டுமே கிடைக்க பெறும். இதில், ஜேசன் கோல்டுமேன் என்ற பயனாளர் டார்சியிடம், டுவிட்டர் தளத்திற்கு சிறந்த தலைவர் என மஸ்க் நிரூபித்து விட்டார் என நம்புகிறீர்களா? என கேட்டு உள்ளார். அதற்கு டார்சி இல்லை என தெரிவித்து உள்ளார். அவர் மற்றொரு பதிவில், எலான் அல்லது எவரேனும் ஒருவர் நிறுவன உரிமையை வாங்க விரும்புகிறார் என்றால், நிறுவனம் தனிப்பட்ட முறையில் செயல்பட கூடிய நிலையை விட கூடுதலான தொகையை தருவது நன்றாக இருக்கும் என்று வாரியம் உணரும் தொகையை விலையாக கூற வேண்டும். இதுவே ஒவ்வொரு பொது நிறுவனத்திற்கும் சரியான விசயம் என தெரிவித்து உள்ளார். அதன்பின், நான் நேர்மறையாக இருக்கிறேனா? என டார்சி கேட்டு விட்டு, அதற்கு ஆம் என அவரே பதிலும் தெரிவித்து கொண்டார்.

வாரியத்திற்கு 100 கோடி அமெரிக்க டாலரை, பிரேக்-அப் தொகையாக மஸ்க் கொடுத்து விட்டு சென்றிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என டார்சி அந்த பதிவில் தெரிவித்து உள்ளார். எனினும், டுவிட்டருக்கு போட்டியாக ஜேக் டார்சி தற்போது புதிய தளம் ஒன்றை வைத்திருக்கிறார். அதனால், தனது சொந்த தளம் பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காக மறைமுக அடிப்படையில், மஸ்க்கின் தலைமையை விமர்சிக்கிறாரா? என்ற கோணத்திலும் அது பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here