பரிசுத் தொகையை வெல்லாத ‘லாட்டரி’ எண்களை கொடுத்ததாக புத்த பிக்குவிற்கு அடி, உதை

தமக்கு பரிசுப் பணத்தை வென்று தராத ‘லாட்டரி’ எண்களைக் கொடுத்ததற்காக, ஆடவர் ஒருவர் புத்த பிக்கு ஒருவரை அடித்த சம்பவம் தாய்லாந்தில் நிகழ்ந்தது.

அதைக் காட்டும் காணொளி ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அது சமூக வலைத் தளங்களில் பரவலானது.

ஆடவரின் தாக்குதலில் தடுமாறிய பிக்கு, தம்மைத் தற்காத்துக்கொள்ள முயன்றார். ஆனால், அவரை நெருங்கிய அந்த ஆடவர் தொடர்ந்து அடித்தார்.

அந்த ஆடவரைத் தடுத்து நிறுத்துவதற்காக பெண் ஒருவர் தலையிடுவது அந்தக் காணொளியில் தெரிந்தது. ஆனால், அந்த பெண்மணியால் அந்த ஆடவரை தடுத்து நிறுத்த முடியவில்லை.

அந்தச் சண்டையில் தெளிவான முடிவு இல்லாமல் காணொளி நிறைவுபெற்றது.

மேலும் அச்சம்பவம் எப்போது நிகழ்ந்தது என்பது பற்றித் தெரியவில்லை.

முன்னதாக புத்த பிக்கு வழங்கிய எண்களைக் கொண்டு, அந்த ஆடவர் ஒவ்வொரு வாரமும் லாட்டரி சீட்டு வாங்கியதாகத் தெரிகிறது.

தாம் கொடுத்த எண்கள் நிச்சயமாக லாட்டரியில் பரிசு வெல்ல உதவும் என்று அந்தப் பிக்கு அந்த ஆடவரிடம் சொன்னதாகக் கூறப்படுகிறது.

அந்தப் பிக்கு சொன்னதை நம்பிய அந்த ஆடவர், கடன்முதலைகளிடம் இருந்து கடன் பெற்று லாட்டரி சீட்டுகளை வாங்கியதாகத் தெரிகிறது.

ஆனால், கடைசிவரை வெல்லாத அந்த ஆடவர், கடன்சுமையில் சிக்கினார். விரக்தி அடைந்ததால் பிக்கை அவர் தாக்கினார் என நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here