இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யக்கோரி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்

இராமேஸ்வரம்:

லங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று சனிக்கிழமை முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

கடந்த 4ஆம் தேதியன்று இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்ற 23 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டனர். அவர்களில் மூவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், சிறையில் இருப்பவர்களையும் சிறைபிடிக்கப்பட்டவர்களையும் விடுவிக்கக் கோரி ஆட்சியர் அலுவலகம் நோக்கிப் பேரணியாகச் சென்ற இராமேஸ்வரம் மீனவர்களிடம் ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி, சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்பதற்கு உத்தரவாதம் அளித்ததைத் தொடர்ந்து, மீனவர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டனர்.

இதனிடையே, இராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 8ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்று கைதான 19 மீனவர்களில் ஒருவருக்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆகமொத்தம் நான்கு மீனவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, பல லட்சம் மதிப்புள்ள மூன்று படகுகளை பறிமுதல் செய்த விவகாரம் இராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, இராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தில் சங்கத் தலைவர் ஜேசு தலைமையில் அனைத்து விசைப்படகு மீனவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது, “சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்கவேண்டும். இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகுகளை மத்திய அரசு மீட்டுத் தரவேண்டும்,” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சனிக்கிழமை தங்கச்சிமடத்தில் அனைத்து மீனவர் சங்கங்கள் சார்பிலும் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர்.

இராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ள போராட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மீனவர்கள் மீதான இலங்கை அரசின் விரோதப் போக்கை கண்டித்து பிப்ரவரி.27ல் பாம்பன் கடலில் இறங்கி மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here