கோலாலம்பூர், பிப்ரவரி 9, 2026:
சீனப் புத்தாண்டு, ரமலான் மாதத் தொடக்கம் மற்றும் பள்ளி விடுமுறை என மூன்று முக்கிய நிகழ்வுகள் அடுத்தடுத்து வருவதால், மலேசியாவின் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து வரலாறு காணாத அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெடுஞ்சாலை பராமரிப்பு நிறுவனமான ‘பிளஸ்’ (PLUS) மலேசியா பெர்ஹாட், உச்சகட்ட நாட்களில் தினசரி 2.2 மில்லியன் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் எனக் கணித்துள்ளது. இது சாதாரண நாட்களில் பயணிக்கும் 2.1 மில்லியன் வாகனங்களை விடக் கூடுதலாகும்.
விடுமுறையை நீட்டிக்க விரும்புவோர் முன்கூட்டியே பயணத்தைத் தொடங்குவதால், அன்றிலிருந்து போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கத் தொடங்கும்.
பிப்ரவரி 15 & 16: சீனப் புத்தாண்டு தினங்கள், பிப்ரவரி 19: ரமலான் மாதத் தொடக்கம் என இவ்விரு பண்டிகைகளும் ஒரே காலப்பகுதிக்குள் வருவதால் வாகனமோட்டிகள் நெரிசலில் சிக்காமல் இருக்கப் பிளஸ் நிறுவனம் பரிந்துரைக்கும் பயண அட்டவணையைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று, பிளஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு மூத்த பொது நிர்வாகி முஹமட் யுசோஃப் அப்துல் அஸிஸ் கூறினார்.
பிரதான ஓய்வு மற்றும் சேவை மையங்களில் (R&R) ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, டோல் சாவடிகளுக்கு அருகில் உள்ள சிறிய ஓய்விடங்கள் அல்லது லே-பை (Lay-by) வசதிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பயணத்தின் போது உடனுக்குடன் போக்குவரத்து நிலவரத்தை அறிய ‘பிளஸ்’ செயலியை (PLUS App) பயன்படுத்துவது சிறந்தது என்றார்.





















