கவின்மலர்
ஜார்ஜ்டவுன், பிப். 27-
வாழும் காலத்தில் நாலுபேருக்குப் பயனுள்ளவர்களாக வாழ்வோம் என்று மலேசிய குற்றத்தடுப்பு அறவாரிய உச்சமன்ற உறுப்பினரும் பினாங்கு மாநிலத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ கா. புலவேந்திரன் நினைவுறுத்தினார்.
பினாங்கு சத்ரியன் சொப்பர்ஸ் அதிவேக மோட்டார் சைக்கிள் சங்க ஆண்டுக் கூட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்துப் பேசிய அவர், கடந்த ஒன்பது ஆண்டுகளாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இச்சங்கத்தினர் தொடக்கத்தில் 11 பேருடன் தொடங்கி இன்று 28 பேராகத் தங்கள் இயக்க உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரித்துள்ளனர். இவர்கள் தங்கள் இயக்கத்தை முறையாகப் பதிவு செய்து செயல்படுவது பாராட்டத்தக்கதாகும் என்றார்.
மிகுந்த விலையுள்ள இத்தகைய மோட்டார் சைக்கிள் சங்கங்களை நமது இளைஞர்களும் ஈடுபடுவார்களா என்று ஒரு காலத்தில் என்னைப் போன்றவர்கள் நினைத்ததுண்டு. இப்போது நம்மவர்களில் பலர் இத்தகைய இயக்கங்களை அமைத்து பொழுதுபோக்குப் பணிகளில் ஈடுபடுவதுடன் சமூக சேவைகளிலும் பங்தகேற்பது மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது.
குறிப்பாக இச்சங்கத்தினர் நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் பயனளிக்கும் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். மலேசிய நாள், பேரரசர் பிறந்தநாள் போன்ற சிறப்பு நாட்களில் நாடு தழுவியப் பய
ணங்களை மேற்கொண்டு நாட்டு மக்களிடையே நாட்டுப்பற்றை விதைத்து வருகிறார்கள்.
கட்டுக்கோப்பும் ஒற்றுமையும் மிகுந்த இயக்கமாக இவர்கள் செயல்படுகிறார்கள். இவர்களின் பல நடவடிக்கைகள் நமது இளையத் தலைமுறையினருக்கும் மாணவர்களுக்கும் நம்பிக்கையூட்டும் வழிகாட்டுதல்களாகத் திகழ்கின்றன. இத்தகையோரின் வழிகாட்டுதல்களால்இளைஞரகளிடையேகுற்றச்செயல்களைக் குறைக்க முடியும்.
இன்றைய சூழலில் பதின்ம வயதினரில் பலர் பல விதமான சமூக சீர்கேடுகளில் ஈடுபடுகின்றனர். அவர்களில் பெண்களின் எண்ணிக்கையும் மிகுந்து வருவது வேதனையளிப்பதாக உள்ளது.
எல்லாரையும் திருத்த முடியாவிட்டாலும் நாட்டைத் திருத்தும் முன் ஊரைத் திருத்துமுன் நமது நல்ல நடவடிக்கைகளின் வழி ஒரு சிலரையாகிலும் திருத்துவோமே. இயலாவிட்டால் வீட்டையாவது திருத்துவோம். எனவே மிகவும் பயனுள்ள இயக்கத்தை வழி நடத்தி வரும் இவ்வியக்கத்தினர் கேட்டுக்கொண்டபடி இவ்வியக்கத்தின் ஆலோசகராக இருக்க ஒப்புக்கொள்கிறேன் என்று டத்தோஸ்ரீ புலவேந்திரன் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் தலைமயுரையாற்றிய இயக்கத்தின் தலைவர் செல்வராஜன் இராமன் கடந்த காலங்களில் தங்கள் இயக்கம் நடத்திய நடவடிக்கைகளையும் இனி நடத்த விரும்பும் திட்டங்கள் பற்றி விவரித்தார். சிறப்பு அங்கமாக டத்தோஸ்ரீ புலவேந்திரனுக்கு ஆலோசகருக்கான நியமனச் சான்றிதழை வழங்கியதுடன் கடப்பிதழ் அமைப்பிலான நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரி தியாகராஜ் சங்கரநாராயணன் கலந்துகொண்டார். இயக்கச் செயலாளர் செல்வராஜ் பெருமாள் வருகையாளர்களை வரவேற்றார்.








