காசா போர் தீவிரம்; பதவியை ராஜினாமா செய்தார் பாலஸ்தீன பிரதமர்

ஸ்ரேல், ஹமாஸ் இடையே போர் நீடித்து வரும் நிலையில் பாலஸ்தீன பிரதமர் முகம்மது ஷ்டய்யே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

போர்
பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசா பகுதியில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம், தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தப் போரில் 30 ஆயிரம் பாலஸ்தீனர்களும், 1,200 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவில் போரை நிறுத்த சர்வதேச முயற்சிகள் தீவிரமடைந்துள்ளது. இச்சூழலில் பாலஸ்தீனத்தில் அதிகார மாற்றத்தை ஏற்படுத்த, அமெரிக்கா முயன்று வருவதாகவும் இதன் காரணமாக பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸுக்கு அழுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் வெளிப்பாடாகவே முகம்மது ஷ்டய்யே ராஜினாமா முடிவு வெளிவந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இருப்பினும் தனது ராஜினாமா குறித்து முகம்மது ஷ்டய்யே கூறுகையில், “வெஸ்ட்பேங்க், ஜெருசலேமில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள், காசா பகுதியில் போர், இனப்படுகொலை மற்றும் பட்டினி கொடூரம் ஆகிய காரணங்களால் பதவியிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன். காசா போர் முடிவுற்ற பிறகு பாலஸ்தீனத்தை நிர்வகிக்க புதிய அரசு அமைவதே சிறந்ததாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைந்த பாலஸ்தீன நிர்வாகத்தின் பிரதமராக முகம்மது ஷ்டய்யே கடந்த 2019ம் ஆண்டு பொறுப்பேற்றார். முகம்மது ஷ்டய்யே தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பிலிருந்து விலகியிருப்பதன் மூலம், பாலஸ்தீனத்தில் அமெரிக்க ஆதரவுடன் புதிய அரசு அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here