சிரம்பான்:
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை முன்னிட்டு சாலையோரம் அரசியல் கட்சியின் பிரச்சாரக் கொடிகளைக் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த 23 வயது இளைஞர் ஒருவர், அடையாளம் தெரியாத லோரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இக்கொடூரச் சம்பவம் நேற்று மாலை 6.40 மணியளவில் ரந்தாவ், கம்போங் பெலாங்கான் (Kampung Belangkan, Rantau) பகுதியில் உள்ள ஜாலான் கோலா சாவா – ரந்தாவ் சாலையில் நடந்துள்ளதாகச் சிரம்பான் மாவட்டக் காவல் துறைத் தலைவர் அசிஸ்டென்ட் கமிஷனர் முகமட் யாத்திம் ஒஸ்மான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளார்.
காவல் துறையின் முதற்கட்ட விசாரணையின்படி, பாதிக்கப்பட்ட 23 வயது இளைஞர் ரந்தாவ் நோக்கிச் செல்லும் சாலையின் இடதுபுற ஓரத்தில் நின்று தேர்தல் கொடிகளைக் கட்டிக் கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத லோரி ஒன்று, முதலில் அங்கிருந்த வழிகாட்டிப் பலகையின் (Road sign pole) மீது மோதி, பின்னர் நிலைதடுமாறி இளைஞரின் மீது பலமாக மோதியுள்ளது.
மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட அந்த இளைஞருக்குத் தலை மற்றும் முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய லோரியின் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் உடனடியாக அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
தப்பியோடிய லோரி ஓட்டுநரையும், அந்த லோரியின் பதிவு எண்ணையும் கண்டறிய காவல் துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்த பொதுமக்கள் அல்லது சம்பவத்தைப் பார்த்த சாட்சிகள் உடனடியாகப் புலனாய்வு அதிகாரி இன்ஸ்பெக்டர் நூர் ஃபட்ஸிலா முகமட் ஜைனுடீனை 019-461 1794 என்ற எண்ணிலோ, சிரம்பான் மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு அறையை 06-603 3222 என்ற எண்ணிலோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தையோ தொடர்புகொண்டு தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1)-இன் கீழ் (அலட்சியமாக வாகனத்தை இயக்கி மரணத்தை விளைவித்தல்) வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.




















